உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் ஒன்றிணைய தயார் : டக்ளஸ் பகிரங்கம்
தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மக்கள் நலனுக்காக தமிழ் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை தலைமை தாங்கிய இயக்கங்களின் ஒன்றிணைவு தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் நலன் சார்ந்து எனது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன் என்பது யாவரும் அறிந்த விடயம்.

நீண்ட வரிசையில் மக்கள்...! நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டு அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரச்சினைகளுக்கு தீர்வு
தமிழ் மக்களின் அரசியல் அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதே எனது அரசியல் அவா. துரதிஷ்டவசமாக பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் தமிழ் கட்சிகளின் ஒத்துழைப்பு உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் மக்களுக்கான தீர்வினை எட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை தமிழ் கட்சிகள் ஓரணியில் எதிர்கொள்வதா அல்லது தேர்தலின் பின்னர் ஓரணியில் செயற்படுவதா என்ற விவாதம் இடம்பெற்று வருகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் எதிர்கொள்வது தொடர்பில் என்னுடன் சிலர் பேசினார்கள். அது நட்பு நீதியாக இடம்பெற்ற தவிர உத்தியோபூர்வமாக பேசுவதற்கோ கலந்துரையாடுவதற்கோ எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஒற்றுமை என்கின்ற விடயம் தமிழ் மக்களின் நலன் சார்ந்து கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை அல்லது ஒன்றிணைவு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு
கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொங்கு சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவை வழங்கியது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்கி இமானுவேல் ஆனல்ட் (Emmanuel Arnold) முதல்வர் ஆனார்.
அதேபோன்று யாழ் மாநகர சபையில் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு (V. Manivannan) ஆதரவு வழங்கி அவரை முதல்வராக தெரிவு செய்வதற்கு உதவினோம்.
அதுமட்டுமல்லாது வேறு பிரதேச சபைகளிலும் மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்படும்போது பாதீட்டை தோற்கடிக்காமல் வெற்றி பெறுவதற்கு எமது கட்சி பங்களிப்பை வழங்கியுள்ளது.
தற்போது எமது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆகவே தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மக்கள் நலனுக்கான ஒன்றிணைவு அவசியம் என கருதும் பட்சத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 2 நாட்கள் முன்
