கொங்கோ குடியரசில் பெரும் துயரம் - ரயில் தடம் புரண்டு பெருமளவானோர் பலி
கொங்கோ நாட்டில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 60 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் போதிய பயணிகள் ரயில், சாலை போக்குவரத்து சேவைகள் இல்லாமல் மக்கள் சரக்கு ரயில்களில் பயணிக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் லூயன் மாகாணத்தில் இருந்து டென்கி நகருக்கு சரக்கு ரயில் ஒன்று இன்று புறப்பட்டது. சரக்கு ரயிலாக இருந்த போதும் அதில் 100-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
பைஆஃப்வி என்ற கிராமம் அருகே பயணித்தபோது ரயில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
