இலங்கை மருத்துவ நிர்வாகிகள் கல்லூரியின் தலைவராக வைத்தியர் சிறீதரன் தெரிவு
இலங்கையின் புகழ்பெற்ற இலங்கை மருத்துவ நிர்வாகிகள் கல்லூரியின் (College of Medical Administrators of Sri Lanka) 2027 ஆம் ஆண்டிற்கான தலைவராக வைத்தியர் சதாசிவம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (25.01.2026) இடம்பெற்ற வருடாந்த பொதுக்குழு கூட்டத்தின் போது அனைவராலும் அவர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கல்லூரியின் சிரேஷ்ட உறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வரும் சிறீதரன், சபை உறுப்பினர், நூலாசிரியர், செயலாளர், உப தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை முன்னதாக வகித்துள்ளதுடன் இப்பதவிகளின் வாயிலாக மருத்துவ நிர்வாகத் துறையின் வளர்ச்சியில் காத்திரமிக்க பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
சுகாதார நெருக்கடி காலங்கள்
தற்போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) பதவியை வகிக்கும் சிறீதரன், 25 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ நிர்வாகத்துறைசார் அனுபவத்தை கொண்டவர்.

இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு சுகாதார நெருக்கடி காலங்களான 2009 உள்நாட்டு இடம்பெயர்வு, கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் போது சேவை தொடர்ச்சி மற்றும் வள மேலாண்மை ஆகியவற்றில் அவரின் தலைமையும் நிர்வாகத் திறனும் சுகாதாரதுறை வட்டாரங்களினால் பாராட்டைப் பெற்றவை.
சுகாதார துறை வல்லுநர்கள் நம்பிக்கை
அவரது தலைமையின் கீழ், இலங்கை மருத்துவ நிர்வாகிகள் கல்லூரி மேலும் வளம் பெற்று வலுப்பெறும் என்பதுடன், மருத்துவ நிர்வாகத் துறையின் கட்டமைப்பு மேம்பாடு, தொழில்முறை பயிற்சி விருத்தி, கொள்கை ஆலோசனை போன்ற துறைகளில் நேர்மையான மாற்றங்களை உருவாக்கும் என சுகாதார துறை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதன் விளைவாக, இலங்கையின் மொத்த சுகாதாரத் துறையின் திறன், தரம் மற்றும் நிலைத்தன்மை மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ நிர்வாகத் துறையின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சதாசிவம் சிறீதரனின் புதிய தலைமை, நாட்டின் சுகாதார அமைப்பில் நீடித்த முன்னேற்றத்திற்கான மேலுமோர் மைல் கல்லாக அமையும் என கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |