அதிக இறப்புக்களை பதிவு செய்த நாடாக பிரித்தானியா - வெளிவந்தன புள்ளிவிபரங்கள்
போதைப் பொருள் தொடர்பான இறப்புக்கள் பதிவு செய்யப்பட்ட 1993 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 2020 ஆம் ஆண்டு அதியுச்ச இறப்புக்களை பதிவு செய்துள்ளது.
ஐரோப்பிய ரீதியில் பிரித்தானியா அதிக இறப்புக்களை பதிவு செய்த நாடாகவும் பதிவு பெற்றுள்ளது.
மொத்தமாக போதைப்பொருள் தொடர்பான 4 ஆயிரத்து 561 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது 10 இலட்சம் மக்களுக்கு 79 தசம் 5 என்ற வீதத்திற்கு சமமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் இறப்புக்களில் அரைவாசி 2019 இல் நிகழ்ந்திருக்கும் என ஓ.என்.எஸ் எனப்படும் தேசியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏனெனில் இறப்புகளைப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தொற்றுநோய்க்கு முன்பே பெரும்பாலான இறப்புக்கள் ஏற்பட்டிருக்கும் எனவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
முறையற்ற போதைப்பொருள் பாவனையால் அதிக இறப்பு விகிதம் இங்கிலாந்தின் வடகிழக்கில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 10 இலட்சம் மக்களுக்கு 104 தசம் 6 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும் லண்டனில் மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கை 33 தசம் 1 வீதம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக 45 தொடக்கம் 49 வயதுடையவர்களே அதிகளவில் இவ்வாறு இறந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.