அரை நூற்றாண்டு இலங்கையை ஆளும் சாபமும், தென்னிலங்கையின் வரலாற்று குருட்டுத்தனமும்
1982 ஆம் ஆண்டின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் , வழக்கமான வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதிகளும், அரச வழக்கறிஞர்களும் அன்றைய நாளை வழமையான ஒரு சாதாரணத் தீர்ப்புக்கான நாளாகவே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அன்று சாட்சிக் கூண்டில் நின்றிருந்த இரு மனிதர்கள் பேசத் தொடங்கியபோது, அந்த நீதிமன்ற அறை இலங்கைத் தீவின் கடந்த காலப் பாவங்களையும், எதிர்காலச் சீரழிவையும் பதிவுசெய்யும் வரலாற்று அரங்கமாக மாறி நின்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) அமைப்பின் தலைவர்களான குட்டிமணியும் தங்கத்துரையும் மரண தண்டனைத் தீர்ப்புக்கு முன் ஆற்றிய அந்த உரைகள், தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தைப் பேசியவை மட்டுமல்ல அது இலங்கை எனும் பேரினவாதக் கட்டமைப்பு தன் சொந்தக் கையால் தன் கண்ணைக் குத்திக்கொள்ளப் போகும் வரலாற்றுத் துயரத்தைப் பதிவு செய்த அரசியல் திறனாய்வு ஆகும்.
தென்னிலங்கையின் முகத்தில் அறைந்த வதைமுகாம்களின் இடப்பெயர்வு
அன்று குட்டிமணி பேசுகின்றபோது சுட்டிக்காட்டிய ஶ்ரீலங்கா தேசத்திற்கான மிக ஆபத்தான எச்சரிக்கை என்னவென்றால் "இன்று தமிழ் இளைஞர்கள் மீது பிரயோகிக்கப்படும் அதே சித்திரவதைகளும் வதைமுகாம்களும், நாளை ஹம்பாந்தோட்டைக்கும் குருநாகலுக்கும் கொண்டு செல்லப்படலாம்."
அன்று கொழும்பிலும் தென்னிலங்கையிலும் வாழ்ந்த பேரினவாத மேட்டிமைவாதிகள் இந்த வார்த்தைகளைக் கேட்டு எள்ளி நகையாடியிருக்கக் கூடும். ஆனால், அரசு எனும் அதிகார இயந்திரத்திற்கு இனம், மொழி, மதம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது . எப்போதும் அதற்குத் தேவை அடக்குமுறைக்கான ஒரு நியாயப்பாடு மட்டுமே என்பதை குட்டிமணி அன்றே அம்பலப்படுத்தினார்.
அவர் சொன்னபடியே நடந்தது. தமிழ் இளைஞர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமும் (PTA), அவசரகாலச் சட்டங்களும், சித்திரவதைக் கூடங்களும் 1980 களின் பிற்பகுதியில் ஶ்ரீலங்காவின் தென்னிலங்கைச் சிங்கள இளைஞர்களையே காவு வாங்கியது.
ஜே.வி.பி கிளர்ச்சியின் போது பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொன்றொழிக்கப்பட்டு, அவர்களின் உடல்கள் ஆறுகளில் மிதந்தபோதுதான், குட்டிமணி எச்சரித்த அந்த ‘வதைமுகாம்களின் இடப்பெயர்வு’ தென்னிலங்கைக்குப் புரிந்தது.
இருபத்தோராம் நூற்றாண்டிலும், அதாவது 2022 ‘அரகலய’ போராட்டத்தின் போது அரச அடக்குமுறைக்கு எதிராக வீதிக்கு வந்த சிங்கள இளைஞர்கள் மீது அதே பயங்கரவாதத் தடைச் சட்டம் பாய்ந்தபோது, அரசுசார் வன்முறை என்பது சிங்களச் சமூகத்தையும் விட்டுவைக்காது என்ற குட்டிமணியின் தீர்க்கதரிசனம் மீண்டும் ஒருமுறை இரத்தக்கறையுடன் அதே கொழும்பில் நிரூபணமானது.
ஶ்ரீலங்காவின் இனவாதப் போதையும், நடுத்தெருவில் நின்ற பொருளாதாரமும்
அதேபோலவே அன்றைய நீதிமன்ற கூண்டில் தங்கத்துரையின் அரசியல் விமர்சனம் இன்னும் ஆழமானது. அதாவது சிங்கள அதிகார வர்க்கத்தின் வர்க்க நலன்களையும், அவர்கள் மக்களை ஏமாற்றும் நுட்பத்தையும் அவர் தோலுரித்துக் காட்டினார் .
அதாவது"இனப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்துவது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாத ஒரு காலம் வரும். அன்றுதான் சிங்கள மக்கள் தாம் மொழி தவிர்த்த ஏனைய விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதை உணர்வார்கள்."
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதலே, நாட்டின் உண்மையான பொருளாதாரச் சீரழிவு, ஊழல், மேட்டிமை வர்க்கத்தின் சுரண்டல் ஆகியவற்றை மறைக்க ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த ஒரே அரசியல் மூலதனம் , தமிழர் எதிர்ப்பு மற்றும் ‘சிங்கள-பௌத்த ஆபத்து’ என்ற பூச்சாண்டிதான்.
அன்றுமுதல் இன்றுவரை அரசியல்வாதிகள் ஊட்டிய இனவாத போதையில் திளைத்திருந்த தென்னிலங்கைச் சமூகம், நாட்டின் பொருளாதாரம் படிப்படியாகக் கட்டமைப்பு ரீதியாகச் சிதைக்கப்படுவதைக் கவனிக்கத் தவறியது.
கடந்த 2022 இல் ஶ்ரீலங்க தேசம் முற்றாகத் திவாலாகி, எரிபொருளுக்கும் உணவுக்குமாக மக்கள் வீதிகளில் இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்தபோதுதான் அன்றைய தங்கத்துரையின் வார்த்தைகள் உண்மையான வலிமையைப் பெற்றன.
"இனவாதப் பகையை ஊட்டி எம்மை ஏமாற்றிவிட்டார்கள்" என்று போராட்டத்தில் ஈடுபட்ட தென்னிலங்கை இளைஞர்கள் உரக்கப் பேசியபோது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்துரை சொன்ன அந்த வரலாற்றுச் சக்கரம் சுழன்று முடித்திருந்தது.
அபிவிருத்தி எனும் பொய் பிம்பமும், தமிழரின் சுயமரியாதையும்
இன்று வரை கொழும்பை ஆளும் ஆட்சியாளர்கள் அவர்கள் வலதுசாரிகளாக இருந்தாலும் சரி, இடதுசாரி வேஷம் போட்டவர்களாக இருந்தாலும் சரி தமிழ் மக்களின் பிரச்சினையை வெறும் "பொருளாதாரப் பிரச்சினை" என்றும் "அபிவிருத்தி சார்ந்த குறைபாடு" என்றும் சுருக்கவே முயல்கிறார்கள்.
ஆனால், தங்கத்துரை அன்றே கேட்ட கேள்வி இதற்கு மிகப்பொருத்தமான ஒன்றாகும் அதாவது "உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல . இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களால் வழங்க முடியும்?"
இன்றைய சூழலிலும் வடக்கு-கிழக்கில் தொடரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தொல்லியல் துறை என்ற பெயரிலான நில ஆக்கிரமிப்புகள், இராணுவமயமாக்கல் ஆகியவை தங்கத்துரையின் அன்றைய அந்தக் கேள்விக்கு இன்றளவும் கொழும்பு பதில் வைத்திருக்கவில்லை என்பதையே காட்டுகின்றன.
உண்மையில் உரிமையற்ற அபிவிருத்தி என்பது ஒரு அடிமைக்கு வழங்கப்படும் வசதியான கூடு மட்டுமே தவிர, அது சுதந்திரமல்ல என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
தோண்டப்பட்ட கண்களும், சிங்கள தேசத்தில் கழன்று விழுந்த பௌத்த விழுமியங்களும்
"நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்" என்ற குட்டிமணியின் இறுதி ஆசை, ஒரு தனிநபரின் உணர்ச்சிப் பெருக்கு அல்ல அது ஒரு தேசத்தின் விடுதலையை நோக்கிய ஆகச்சிறந்த அரசியல் அர்ப்பணிப்பு ஆகும் .
அன்று நீதிமன்றம் அளித்த மரண தண்டனையைக் காட்டிலும், குட்டிமணியின் அந்த வார்த்தைகளின் அரசியல் பலத்தைக் கண்டு கலங்கிந ஶ்ரீலங்க அரச இயந்திரம், 1983 கறுப்பு ஜூலை வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் போது சிறைக்குள்ளேயே அவர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது. குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்த அந்த அரச வன்முறையானது , ஶ்ரீலங்க அரசு தன் சொந்தச் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் கொண்டிருந்த அஞ்சாமையைக் காட்டவில்லை அதற்கு மாறாக அது அவர்களின் பயத்தையும், நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனத்தையுமே உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.
குட்டிமணியும் தங்கத்துரையும் அன்று அங்கு பேசியது வெறும் அரியல் ஆர்வமுடைய விடுதலை வேட்கை கொண்ட இரண்டு இளைஞர்களின் எழுந்தமானமான உணர்வுந்திய வெறும் வார்த்தைகள் அல்ல அது இலங்கைத் தீவு தனக்குத் தானே தோண்டிக் கொண்ட அரசியல் குழியைப் பற்றிய முன் அறிவிப்பு ஆகும்.
இன்று இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டும், அரசியல் மறுசீரமைப்புப் பற்றிப் பேசிக்கொண்டும் இருந்தாலும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும், கடந்த காலப் போர்க்குற்றங்களுக்கான நீதியையும் அங்கீகரிக்காத வரை இந்தத் தீவுக்கு விமோசனம் இல்லை.
"அடுத்தவனின் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் எந்தவொரு சமூகமும், தனது சொந்தச் சுதந்திரத்தையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது" என்ற குட்டிமணி-தங்கத்துரையின் எச்சரிக்கையை தென்னிலங்கை சமூகம் என்றைக்கு முழுமையாக உணர்கிறதோ, அன்றைக்குத்தான் இந்தத் தீவில் உண்மையான அரசியலும் விடுதலையும் சாத்தியமாகும்.
| பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் பா.பிரியங்கன் அவரால் எழுதப்பட்டு, 27 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. |