சத்துருக்கொண்டான் - வந்தாறுமூலை படுகொலை சம்பவங்களில் காயங்களுடன் தப்பிய முக்கிய சாட்சி!
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளைகளுக்கான சாட்சியங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுன்றில் இது குறித்து நேற்று(09.09.2026) கருத்து வெளியிட்ட அவர், இந்த கொலைகளுக்கான சுயாதீன விசாரணை அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ''36 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இந்த படுகொலைகள் இடம்பெற்றன.
அயல்நாட்டில் வாழும் சாட்சி
இந்த விடயத்தில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியானது நிலைநாட்டப்படவேண்டும்.

செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி என்பது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரை மறக்க முடியாத ஒரு கறை படிந்த நாளாகும்.
90 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமிற்கு கொக்குவில், பிள்ளையாரடி உள்ளிட்ட அப்பகுதியில் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக அழைக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு வயதிற்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளடங்குவர். பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் 40 பேர் பெண்கள் 85 பேர் வயது முதிர்ந்தவர்கள் என மொத்தமாக 186 பேர் போய்ஸ் டவுன் என்று சொல்லப்படுகின்ற அந்த முகாமில் வைத்து அன்றைய தினம் அத்தனை பேரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரே ஒருவர் மாத்திரம் கடுமையான காயங்களுடன் தப்பியுள்ளார். அவர்தான் கிருஷ்ணகுமார். அவர் இப்போதும் அயல்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
பற்றை மறைவிலிருந்து பார்த்தவர்
அதேபோன்று இன்னும் ஒருவர் அந்த சம்பவத்தை பற்றை மறைவிலிருந்து பார்த்தவர் என்று அறியப்படுகிறது. அவர் வைரமுத்து குழந்தை வடிவேல் என்பவர். அவரோடு மேலும் சிலரும் பற்றைகளுக்குள் மறைந்திருந்து இந்த சம்பவத்தை பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் அந்த முகாமில் இருந்த படையினரும் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்படி 185 பேரையும் படுகொலை செய்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்தபோது ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்திருந்தார்.
அந்த ஆணைக்குழு மூலம் சில உண்மைகள் வெளிக்கொணரப்பட்டிருந்தன. கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரம் கூட அதன் போது அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த இராணுவ முகாமிற்கு காமினி வர்ணகுல சூரிய என்பவரே பொறுப்பாக இருந்துள்ளார். 36 ஆண்டுகள் கடந்தும் இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
சம்பந்தப்பட்ட மக்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு ஆணைக்குழுவை அமைத்திருந்தாலும் அந்த விசாரணை முடிவடைவதற்கு முன்பாக செம்மணியில் மேலும் 600க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அங்கு தற்போது 584 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |