காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பார்சல்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணைகள்
காலி சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வீசப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் காலி சிறைச்சாலையின் பின்புறம் அமைந்துள்ள காலி தொடருந்து நிலைய வளாகத்திற்கு (Galle Railway Yard) அருகில் இருந்து சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
காவல்துறை விசேட பணியகத்திற்கு (Police Special Bureau) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காலி காவல்துறை தலைமையகத்துடன் இணைந்த அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட பொருட்கள்
அந்த இரு நபர்களால் வீசப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சலை மீட்ட காவல்துறையினர் அதனைப் பரிசோதித்த போது அதில் ஐஸ் (Ice) என அழைக்கப்படும் 2,180 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள், புகையிலை மற்றும் மொத்தம் 49 சிகரெட் லைட்டர்கள் (Cigarette lighters) இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

சிறைச்சாலை கைதிகளை சென்றடையும் நோக்கில் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட இந்த பார்சல் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசுவதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காலி காவல்துறை தலைமையகத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |