இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
ஈழவிடுதலைப் போராட்டத்தில் கிழக்கு மாகாணம் ஒரு பெரும் வலிமையைத் தந்தது என்றால் அதற்குப் பின்னால் அந்த மாகாணம் சந்தித்த இனவொடுக்குமுறையின் வலிகள் நிறைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் பல இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன..
ஜுன் மாத்தில் மூன்று பெரும் இனப்படுகொலைகள் அந்த மண்ணில் நிகழ்ந்தேறியுள்ளன. அவை ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெருந்தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளன.
இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் பெருந் தாக்கமாய் அமைந்த கல்லோயாப் படுகொலையும் இந்த மாத்தில் தான் நடந்திருக்கிறது. இலங்கையை இரண்டாக்கிய கல்லோயா படுகொலை நம் நாட்காட்டிகளை தட்டும் போதெல்லாம் குருதி சிந்திக் கொண்டிருக்கிறது.
கால நாட்காட்டியில் நாம் கொல்லப்படாத நாட்கள் எதுவும் இருக்கிறதா என்று தேடினால் ஏமாற்றம்தான் எஞ்சுகிறது.
உண்மையில் இலங்கைத் தீவில் ஒரு சிறுபான்மை இனம் எந்தளவுக்கு இனவழிப்பு செய்யப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை நம் நாட்காட்டியின் சிவப்பு நிறம் வெளிப்படுத்தி நிற்கிறது.
முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனவழிப்பு நிகழ்ந்துவிடவில்லை என்பதையும் வடக்கில் மாத்திரம் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்த்தப்படவில்லை என்பதையும் கிழக்கு மாகாண மண்ணில் நடந்த பல படுகொலைகளும் எடுத்தியம்பி நிற்கின்றன. பிரித்தானியரின் காலத்தில் அரச உத்தியோகங்களில் பெரும்பான்மையாக ஈழத் தமிழர்கள் இருந்தார்கள்.
தேன் ஒழுகும் தமிழ்
அந்த நிலையை மாற்ற வேண்டும் என்று கருதிய சிங்கள அரசு கல்லோயா குடியேற்றத் திட்டத்தை முன்னெடுத்து சிங்கள மக்களை இலங்கையில் மாத்திரமின்றி தமிழர் தேசத்திலும் பெரும்பான்மையாக்க நினைத்தது.
பெரும்பான்மையின குடியுற்றவாசிகள் கல்லோயா திட்ட அரச ஊழியர்கள் இணைந்து இந்தப் படுகொலையைச் செய்ய சிறிலங்கா அரச படைகளும் காவல்துறையும் வேடிக்கைப் பார்த்து நின்றன.
1956அம் ஆண்டு ஜுன் 11ஆம் நாளன்று தொடங்கிய படுகொலை ஜூன் 16ஆம் திகதிவரை நடந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் தனிநாடு கோரிய போராட்டத்தை முன்னெடுக்க அடிப்படையாக கல்லோயா குடியேற்றமும் படுகொலையும் அடிப்படையாகின.
குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலை கொக்கட்டிப்படுகொலை என்று தேடல்களை செய்தால் இரண்டு படுகொலைகளைப் பற்றிய விபரங்கள் சேகரம் ஆகின்றன.
ஒன்று 19987இல் நடந்த இனப்படுகொலை. மற்றையது 1991இல் நடந்த இனப்படுகொலை. ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் தனித்துவமான வாழ்க்கை பண்பாட்டையும் வரலாற்றையும் கொண்ட மண். தேன் ஒழுகும் தமிழ் புளங்கும் அம் மண்ணில் சிஙகள அரசு பல்வேறு படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் நிகழ்த்தியிருக்கிறது.
எண்பதுகளின் துவக்கத்திலும் இறுதிப் பகுதியிலும் கிழக்கு மாகாணத்தில் முடுக்கிவிடப்பட்ட படுகொலைகளுக்குப் பின்னால் மாபெரும் அரசியல் இருக்கிறது. நேரடியாக சிறிலங்கா அரசே அப் படுகொலைகளை நடாத்தியுமிருக்கிறது.
புல்லுண்ட கல் நந்தி
கொக்கட்டிச்சொலை என்றதும் நம் நினைவுக்கு வருவது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்தான். ஈழத்தின் புரதானமான தான்தோன்றீச்சரமாக விளங்கும் இக் கோவில் ஈழத்தின் சிவ ஈச்சரங்களில் ஒன்று. திருகோணமலை மண்ணில் கோணேச்சர ஆலயம் முக்கியத்துவம் பெறுகிறது. அது கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி தமிழர் தேசத்திற்கே பெருமையும் ஆதாரமுமாய் அமைந்த கோவில்.
மட்டக்களப்பு மண்ணில் தான்தோன்றியாக உருவெடுத்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அந்நியப் படையெடுப்புக்களின் போது அழிக்கப்பட்டது.
போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் "புல்லுண்ட கல் நந்தி" இக்கோவிலின் பெருமைகளில் ஒன்றாக இருப்பது மீண்டுமொருமுறை உயிர்த்தலின் அடையாளமதாகும். முதற்படுகொலை கொக்கட்டிச்சோலையின் இப் பெருமை முகத்தில் இனவழிப்புக் குருதியினால் கோடுகளை வரைந்தது இலங்கை அரசு. இலங்கையின் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் (J.R. Jeyawardana) திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைளில் ஒன்றான கொக்கட்டிச்சோலையின் முதற் பகுதி 1987ஆம் ஆண்டில் தை 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் நிகிழத்தப்பட்டது.
ஜே.ஆரின் வழிநடத்தலில் சிறிலங்கா அரசின் விசேட அதிரடிப்படைகள் நடத்திய கோர இனப்படுகொலை அதுவாகும். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள கிராமங்கே இரத்ததினால் உறைந்த அந்தப் படுகொலையில் 86இற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
12பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே காணாமல் போயினர். கொக்கட்டிச்சோலைக் கிராமங்களை இலங்கை அரசின் விசேட படைகள் சுற்றி வளைத்திருக்க வான் வழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மண்முனைத்துறைக்கும் மகிழடித் தீவுக்கும் இடையில் உள்ள இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்ளைதான் முதலில் படுகொலை செய்தனர் அதிரடிப்படையினர்.
இரண்டாவது இனவழிப்பு
அன்று இறால் பண்ணையே இரத்தப் பண்ணையாக மாறியது என்று எழுதுகிறார் மணலாறு விஜயன். அந்த மக்களை கைது செய்து தமது துப்பாக்கிளால் சுட்டு வெறிதீர்த்த பின் ரயரிட்டு எரித்து தமது இனவெறியை தீர்த்துக் கொண்டனர்.
மீண்டும் மற்றொரு படுகொலை இந்தப் படுகொலை நடைபெற்று நான்கு வருடங்களின் பின்னர், ஜூன் 12ஆம் நாள் மற்றொரு படுகொலையை சந்தித்தது கொக்கட்டிச்சோலை. மரணத்தின் மேல் மரணமாக குருதியின் மேல் குருதியாக இப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இப் படுகொலையின் போது 150 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
பெண்களும் குழந்தைகளும் என அப்பாவித் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று அழைக்கப்படுதலின் பெயரில் கொன்றழிக்கப்பட்ட குரூர நிகழ்வாக கருதப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை சந்தித்த இரண்டாவது இனவழிப்பாக கருதப்படும் இப் படுகொலையுடன் வேறு பல ஒடுக்குமுறை நிகழ்வுகளுடன் இப் பகுதியில் சுமார் ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டமையும் இம் மண்ணின் துயர வரலாறு ஆகும். இப்படுகொலையை செய்த சிறிலங்கா அரசு தன்னை தானே விசாரிக்கும் ஆணைக்குழு ஒன்றையும் அமைத்தது.
இப் படுகொலைகளை நடத்திய இலங்கை படையினரை கட்டுப்படுத்த கட்டளை அதிகாரி தவறி விட்டதாக ஆணைக்குழுவால் கண்டறியப்பட்டதாகவும் அவரைப் பதவியில் இருந்து அகற்றுமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்தது.
அத்துடன் படுகொலைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரில் 19 பேரை ஆணைக்குழு அடையாளம் கண்டதுடன் கொழும்பில் நடத்தப்பட்ட சிறிலங்கா இராணுவ விசாரணைகளில் இந்தப் 19 பேரும் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட போதும் பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டமை குறித்த ஆணைக்குழுவின் உண்மை முகமாகும்.
ஆறாத காயம்
அமைதி பெறாத ஆத்மாக்கள் கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழமும் சர்வதேச அளவிலும் நினைவுகூரல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றன.
இம்முமுறையும் மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை மண்டபத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றன. அத்துடன் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் இடம்பெற்றன. ஆனாலும் இந்த ஆத்மாக்களின் சாந்தி இன்னமும் அமைதி அடையாமல் இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது.
மட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத் தமிழ் மக்களை துடைத்தெறிந்து அந்த மண்ணை அபகரிப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஒரு அரசியல் நோக்கம் கருதிய இராணுவ நடவடிக்கையே கொக்கட்டிச்சோலைப் படுகொலை. மிகவும் நன்கு திட்டமிட்ட இன அழிப்பாக அன்றைய அரசால் தனது படை எந்திரத்தின் மூலம் நடாத்தப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறாத காயமாக நிலைத்துவிட்டது.
முள்ளிவாய்க்கால் படுகொலை
இன்றைக்கு இப் படுகொலை நிகழ்த்தப்பட்டு முப்பத்தொரு வருடங்கள் கழிந்துவிட்டன. இன்றுவரையிலும் அதற்கான நீதி வழங்கப்படவில்லை. மாறாக அதற்குப் பிறகு இன்னும் பல இனப்படுகொலைகளை மட்டக்களப்பு மண்ணும் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தேசமும் முகம் கொடுத்து வந்திருக்கிறது.
எல்லாப் படுகொலைகளும் நீதியைத்தான் வலியுறுத்துகின்றது. அது கொக்கட்டிச்சோலையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலும் நீள்கிறது.
கிழக்கில் தொடங்கி வடக்கில் நீண்டு குரல் எழுகிறது. நம் நாட்காட்டியின் அத்தனை பக்கங்களும் இனவழிப்பால் பாதிக்கப்பட்ட எம் இனத்தின் எளிய மக்கள் போல நீதியின் தவிப்பை சிந்துகின்றன. சர்வதேச விசாரணை ஒன்றே காலத்திற்கு முந்தைய இப் படுகொலைகளுக்கும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கும் விடையளிக்கும் என்பதுதான் ஈழக்களின் நம்பிக்கையும் போராட்டமும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 14 June, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.