ஒரு தேசிய இனத்திற்கு காணி அதிகாரம் இல்லை என்றால்...
Courtesy:மாட்டின் ஜெயா
காணி அதிகாரம் இல்லை என்றால் ஒரு தேசிய இனத்தினால் தனது பொருளாதார நடவடிக்கையை மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுக்க முடியாது.
பேரரசுக் கொள்கையை கொண்ட பல சாம்ராஜ்ய நாடுகள் இன்னொரு நலிந்த நாடுகளின் மீது படையெடுக்கும் பொழுது தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்காக நிச்சயமாக அந்த நாடுகளின் நிலங்கள் மீதான அபகரிப்பு சார்ந்த கொள்கையானது வலிமையாகக் காணப்படும்.
இச்சட்டங்களின் மூலம் காணிச் சட்டங்களை உருவாக்கி, நில அபகரிப்புகளைச் செய்துள்ளனர் என்பது வெளிப்படை உண்மை.
காணி அபகரிப்பு
இவை அரச காணிகள் என்று கூறும் அளவிற்கு அந்நிய ஆதிக்கத்தினுடைய அரசியல் முறைமை நடைமுறையில் இருந்திருக்கின்றது.
உதாரணமாக, போர்த்துக்கேயரும் சரி, ஒல்லாந்தரும் சரி, ஆங்கிலேயர் என்றாலும் சரி இவர்களுடைய காணிச் சட்டங்கள் தத்தமது அரசாங்கம் அதனுடைய அரசுக்கும் மிக இலகுவாக கிடைக்கக் கூடியவாறான சட்டதிட்டங்களை செய்து தமக்குரிய குடியேற்ற காணிகளாக அவை எழுதப்பட்டிருக்கின்றது.
அதுமட்டுமல்ல முடிக்குரிய காணி அந்தஸ்தினையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. “பூர்வீகமானவை பின்னாளில் நாடு பிடிக்க வந்தவர்களினால் முடிக்குரிய அந்தஸ்தை எவ்வாறு பெற முடியும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா..!” இதனால் நாம் கூற வருவது என்னவென்றால், அந்நிய சக்திகள் விவசாய நிலங்களையும், மந்தை வளர்ப்பு நிலங்களையும் அபகரித்து, தங்களுடைய நலன்களுக்காக, தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பயன்படுத்திச் சென்றிருப்பதை நாம் அவதானிக்கலாம்.
பல்வேறு காணிச் சட்டங்களினூடாக உதாரணமாக தரிசு நிலச் சட்டம், பாழ் நிலச்சட்டம் என்னும் புதிய புதிய சட்டங்களை அறிமுகம் செய்து, சாதாரண மக்களினுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் அளவிற்கு காணிச் சட்டங்களை ஆயுதமாகப் பிரயோகித்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல, மண் வளத்துக்கு மிகவும் ஆபத்தான பயிர்களையும் பயிரிட்டு அதிக லாபமீட்டும் நோக்குடனும், குறுகிய நோக்குடனும் செயற்பட்டதையும் காணலாம். விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி வனவள, ஜீவராசிகள் பாதுகாப்பு என்ற அடிப்படையில் அவை சூறையாடப்படுவதையும் நாம் காணலாம்.
தரவை மேய்ச்சல் தரை விவகாரம்
குறிப்பாக, வன்னி தேர்தல் மாவட்டங்களான மன்னார், முல்லைத்தீவு, வவுனியாவை உள்ளடக்கிய 6.580 சதுர கிமீ நிலத்தில் காணி உரிமங்களைக் கொண்ட மக்களின் நிலங்கள் வனவள, ஜீவராசிகள் பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களையும், புலம்பெயர் முதலீட்டாளர்களையும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான தடைகளின் ஊடாக மன உளைச்சலை உண்டுபண்ணி வெளியேற நிர்ப்பந்திக்கிறார்கள்.
அதேபோல், கிழக்கில் தமிழர்களின் பூர்வீகமான “தரவை மேய்ச்சல் தரை” விவகாரமானது சிங்கள, பெளத்த மேலாதிக்க நடவடிக்கையாக வெளிப்பட்டு நிற்கின்றது.
இன்றும் இம்மக்கள் தமது விலங்குகளை மேய்ச்சல் தரையில் விட்டு வரமுடியாத அவல நிலை தொடர்கின்றது. அவர்கள் உயிர் வாழ இந்த விலங்குகளே உள்ள நிலையில் அவ் உயிர்கள் வாள்வெட்டிற்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் இலக்காகி மடிகின்றன…! இது எதை வெளிப்படுத்தி நிற்கின்றது..? “ மனிதன் உயிர் வாழும் உரிமை” மறுக்கப்படுகின்றது.மேய்ச்சல் தரைகளையும், சேனைத்தரைகளையும், விவசாய நிலங்களையும் இழந்துபோன மக்கள், தொடர்ச்சியாக பொருளாதாரத்தில் படிப்படியாக வீழ்ச்சியடைவதைக் கூட நாம் தற்போது காணமுடிகிறது.
பொருளாதாரத்தின் மேல் விழும் அடியானது தனிமனிதனை, சமூகத்தை மறைமுகமாக வெளியேற்ற வழிகளைத் திறக்கின்றது. இதன் தாக்கம் வடக்கு, கிழக்கு மாகாண இளைஞர்களின் பாரிய புலம்பெயர்விற்கு வித்திட்டுள்ளது.
ஏற்கனவே, யுத்தத்தின் கோரத்தாண்டவங்களினாலும் அவற்றின் கொடூர கரங்களினாலும் இம்மண்ணிலே வாழ முடியாது என்பது முடிவாக்கப்பட்டு புலம்பெயர்ந்தவர்களின் நிலங்கள் திட்டமிட்ட தரிசு நிலங்களாகவே காணப்படுகின்றன.
பல்வேறு தேசங்களில் வாழும் நமது மக்கள் தமது தாயக பூமியை நேசித்த வண்ணம் இருப்பதோடு, அந்த நிலங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து காடடைந்து, புதர் மண்டிக் கிடக்கும் தேசமாக்கப்பட்ட தமது நிலங்களை மீண்டும் பயன்தரும் நிலங்களாக மாற்ற வேண்டும் எனும் கொள்கையோடும் வாஞ்சையோடுமே வாழ்கின்றனர்.
காணி அதிகாரம்
“40-45 வருடங்கள் யுத்தமும் அதன் தாக்கமும் உள்ள மண்ணில் காடுகளும், புதர்களும் மண்டிக்கிடக்கும். அதனை வனவளத் துறையினருக்கான இடமாக அடையாளமிடுவதும், ஆக்கிரமிப்பதும் எந்த வகையில் நியாயமாகும்.
ஆனால், மறுபக்கமாகப் பார்க்கின்ற பொழுது 13ஆம் சீர்திருத்தத்தில் காணியும் காணியமர்வும் பற்றி நோக்கும் பொழுது, முடிக்குரிய காணியும் காணிக்குடியேற்றமும் தொடர்ந்து மத்திய அரசுக்குரியதாக்கப்பட வேண்டும் என்றும், முடிக்குரிய காணியானது ஒதுக்கிய விடயம் ஒன்று தொடர்பில் மாகாணத்தில் அரசாங்கத்தின் நோக்கங்களுக்காக தேவைப்படும் பொழுது, முடிக்குரிய காணி அவ்விடத்தை ஆளுகின்ற சட்டங்களுக்கு இணங்க மாகாண சபையைக் கலந்தாலோசித்து, அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படலாம் என்றும், குறிப்பிட்டுக் காணி அதிகாரம் மாகாண சபையிடம் இருந்து மத்திய அரசிடம் சிறைப்பட்டுக் கொண்டது.
ஜனநாயக முறை வளர்ச்சியடைந்த தற்போதைய நிலையில் மிக நாகரீகமாக காணி அபகரிப்பானது செய்யப்படுவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகக் காணப்படுகின்றது. அரச காணிகள் மத்திய அரசுக்கு உரித்தாதல் வேண்டும் என்றே யாப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், காணிகளைப் பயன்படுத்தும் உரிமை மாகாண சபைகளுக்கு உரியது என்றும் கூறப்பட்டது. இது அவ்வாறு இருந்த பொழுதும், மத்திய அரசின் கொள்கைகளுக்கு ஏற்பவே மாகாண சபைகள் காணிகளை பயன்படுத்த முடியும்.
அது மட்டுமல்ல, மத்திய அரசின் தேவைக்கேற்ற காணிகளை அது சுவீகரித்துக் கொள்ளலாம் எனவும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு
விவசாய குடியேற்றங்கள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு ஏற்பவே திட்டமிட்டு உருவாக்கப்படுவதோடு, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கான கொள்கைகளையும் இந்த மத்திய அரசு தீர்மானிக்கும் என்பது 13ஆம் சீர்திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட காணி அதிகாரங்கள் எழுதப்பட்டு மீண்டும் பறிக்கப்பட்ட நிலையிலையே அது காணப்படுகின்றது.
மேலும் நாம் நோக்குகின்ற பொழுது மாகாண சபைகளானது காணிச் சட்டங்கள் நடைமுறை சார்ந்த பணிகளையே மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
மத்திய அரசு காணி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு தேசிய காணி ஆணை குழுவின் கீழ் இவற்றை ஒருங்கிணைத்து தேசிய காணி ஆணைக் குழுவையும் மத்திய அரசின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருப்பது மத்திய அரசின் மேலாதிக்கத்தையே வெளிப்படுத்துகின்றது.
இறுதியில் தேசிய காணி ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட தேசிய கொள்கைகளைக் கருத்திற் கொண்டு, மாகாண சபைகளினால் அவை பிரயோகிக்கப்பட வேண்டும். இவ்வாறு மாகாண சபை முறை பல இடர்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட மத்திய அரசவலுக்குவிப்பாகவே தோற்றமளிக்கின்றது.
காணி உரிமை
எனவே, இதுவரை காணி சார்ந்த எந்த அதிகாரமும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை. அது மட்டுமல்ல, இவ்வதிகாரங்களை நடைமுறைக்கு கொண்டு வரவும் அரசு முயற்சிக்கவில்லை.
பேரினவாத சக்திகள் இதனை எதிர்க்கும் என்ற தமது அரசியல் இலாபங்களுக்காக ஒரு பக்க சிந்தனையில் செயலாற்றுகின்றது.
வடக்கு கிழக்கு பிரதேசங்களை பூர்வீகமாக கொண்ட எமது மக்கள் அரசியல் பொருளாதார துறைகளில் தம்மை முன் நகர்த்திச் செல்வதற்கு பதின்மூன்றாம் சீர்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டும் வழங்கப்படாதிருக்கின்ற காணி அதிகாரங்கள் உடனடியாக எமது மக்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் உறுதியான அழுத்தங்களைக் கொடுத்து எமக்கான காணி உரிமைகளை மீட்போம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |