கிழக்கு ஆளுநரின் தன்னிச்சையான செயற்பாடு - பள்ளிவாசல் சமூகத்தினர் சாணக்கியனுக்கு கடிதம்!
ஏறாவூர் புன்னக்குடா வீதியின் பெயரை மாற்றும் கிழக்கு ஆளுநரின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த குரல் காடுக்கமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
ஏறாவூரிலுள்ள மஸ்ஜிதுர் றிபாய் பள்ளிவாசல் நிருவாகத்தினரே இவ்வாறு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடிதத்தில், இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை நிறுத்தக் குரல் கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“புன்னக்குடா வீதி என்ற பெயருடன் பயன்படுத்தப்படும் வீதி ஏறாவூர் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் ஆரம்பித்து சுமார் 5.23 கிலோமீற்றர் வரை சென்று புன்னக்குடா கடற்கரையில் முடிவடைகின்றது.
வீதி பெயர்மாற்ற சர்ச்சை
இவ்வீதி அமைந்துள்ள பிரதேசம் முழுவதிலும் 99 சதவீதமாக தமிழ் முஸ்லிம் மக்களே நிறைந்து வாழ்கின்றனர். இவ்வீதிக்கு பெயரிடக்கூடிய எத்தனையோ தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து மறைந்த போதிலும் இதில் யாரேனும் ஒரு தனிநபரின் பெயரைச் சூட்டுவதன் மூலம் ஓர் இன மக்கள் மனம் நொந்து கொள்வார்கள் என்பதால் பொதுவான புன்னக்குடா வீதி என்ற பெயரையே மிக நீண்டகாலமாகவே பயன்படுத்தி வருகின்றோம்.
இலங்கையின் வரைபடத்திலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கால காணி உறுதிகளிலும் புன்னைக்குடா வீதி என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் தென்பகுதியைச் சேர்ந்த சுனில் ஆரியபால என்பவரின் தலைமையில் சிலர் ஒப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றின் மூலம் மிகப் பழைமை வாய்ந்த புன்னக்குடா வீதி என்னும் பெயரை எல்மிஸ் வல்கம “Elmis Walgama” என பெயர் மாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சாணக்கியனுக்கு கடிதம்
கிழக்கு மாகாண ஆளுநரும் இதனைக் கவனத்தில் கொண்டு சில தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஆகவே ஆளுநரின் இந்த செயற்பாட்டை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எனவே தயவுசெய்து தாங்கள் இவ்விடயத்தில் கரிசனை செலுத்தி, இப்பகுதியில் இன நல்லுறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வீதிப் பெயர்மாற்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி தொடர்ந்தும் புன்னக்குடா வீதி என்னும் பெயரிலேயே இவ்வீதி அழைக்கப்படவும், சகல இன மக்களின் நல்லுறவு பேணப்படவும் வழிசமைக்குமாறு தயவாகக் கேட்டுக்கொள்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கடிதம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.