இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்பும் ரணில்
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் இதனை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு கடனுதவிகளை வழங்கி இருந்தது.
அத்தோடு இலங்கையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யும் எனவும் உறுதியளித்திருந்ததுடன் இந்தியாவின் பிரபல ஐடிசி குழுமம் கொழும்பில் பல ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமான சொகுசு ஹோட்டலொன்றை அமைத்துள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு
இந்த ஹோட்டலை அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று(26) திறந்து வைத்ததோடு அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா இப்போது வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ளதுடன் இதன் மூலம் இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது.
குறிப்பாக சுற்றுலாத் துறையை முன்னிலைப்படுத்தி இந்தியாவுடன் அதிக பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்த விரும்புவதோடு அதிக ஒத்துழைப்பால் இரு நாடுகளும் ஆதாயம் அடையும்.
இலங்கை விடுமுறை
இந்த ஹோட்டல் இலங்கைக்கு குறிப்பாக இந்தியாவில் இருந்து சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை அத்தோடு நமது பொருளாதாரத்தை எப்படி ஒருங்கிணைத்து நாம் நெருங்கி வருகிறோம் என்பது குறித்து கடந்த ஆண்டு நானும், பிரதமர் மோடியும் கையெழுத்திட்ட தொலைநோக்கு அறிக்கையின் ஒரு பகுதியாக இவை உள்ளன.
பல வருடங்களாக இலங்கை விடுமுறையை கழிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அத்தோடு எதிர்காலத்தில் பெங்களூர், சென்னை மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஒருவர் இந்தியாவின் வடபகுதிக்கு செல்வதை விட விமானத்தில் ஏறி இங்கு (இலங்கை) வருவது எளிதாக இருக்கும்” என ரணில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |