இலங்கைக்கு மீண்டும் பேரழிவு!! பகிரங்க எச்சரிக்கை
ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுவதைப்போன்று அரச தலைவரை பதவிநீக்க முடியாதென அரசாங்கத்திற்கு ஆதரவான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவான சட்டத்தரணிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பு தொடர்பில் தெளிவான புரிதல் இன்றி, தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது போன்று தோன்றுவதாக இதன்போது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச தலைவர், பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது நாட்டில் மீண்டும் ஒரு பேரழிவை ஏற்படுத்துமெனவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மக்களை ஈடுபடுத்தி வேறு அமைப்புகள் முன்னெடுத்துவரும் அரசியல் சதி குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.
