செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத்தினருக்கு அனுமதி
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று (07) இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்தார்.
ஏற்கனவே யாழ்ப்பாணம் திறந்த நீதிமன்றத்தில் செம்மணி மனித புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கான அனுமதி கோரப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்
இந்தநிலையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி காலை 09.30 மணிக்கு முன்னராக அல்லது மாலை 02.30 மணிக்கு பின்னராக புதைகுழி காணப்படும் பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட முடியும் என மன்று அனுமதித்துள்ளது.
எனவே இந்த இரண்டு நேரங்களில் எந்த நேரத்தில் செல்லவுள்ளனர் என்பதனை முன்னரே மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என மன்று அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |