அரசியல் அமைப்பை மீறி செயற்பட முடியாது: பிரதமர் ரணில் அறிவிப்பு
சட்டத்திற்கு ஏற்ப தான் அரசாங்கம் இயங்க வேண்டும் என்றும் அதை மீறி செயற்பட முடியாது
எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்ட விசேட அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பதவி விலகுவதாக அறிவித்திருந்த போதும் போராட்டகாரர்கள் தனது வீட்டிற்கு தீ வைத்ததாகவும் அச்சமயம் தான் வீட்டில் தான் இருந்ததாகவும் சுட்டிக்காட்டினர்.
ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக உரை வருமாறு
நாட்டின் பொருளாதாரம் சரிந்ததால் தான் நான் பிரதமர் பதவியை ஏற்றேன். உண்மையாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத ஒரு தருணத்தில் தான் நான் பதவியேற்றேன்.
மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பெரும்பாலானோர் வேலைகளை இழந்திருந்தனர். வாழ்க்கை செலவு அதிகரித்திருந்தது. அதேபோல் எரிபொருள் கிடைக்காமல் கஷ்டப்பட்டார்கள். இப்படியான ஒரு துயரத்தை நான் இதற்கு முன் கண்டதேயில்லை. அதனால் தான் நான் இந்த பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன்.
அத்துடன் நாட்டின் அபிவிருத்தியை சீர்செய்ய ஆரம்பித்தேன். இதை 2 நாட்களில் செய்யக்கூடிய காரியம் அல்ல. ஆரம்பகட்ட வேலைகளுக்கு குறைந்தது 1 வருடமாவது செல்லும். குறிப்பாக 4 வருடங்கள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதில் முதல் வருடம் தான் மிகவும் கஷ்டமான வருடம். நான் பிரதமராகிய காலத்திலும் இந்த பிரச்சினை இருந்தது. உண்மையாகவே எரிபொருளுக்கான வரிசைகள் அதிகரித்தது. எமக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளது. அவற்றிக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.
இந்த பிரச்சினைகள் அடுத்த 3, 4 மாதங்களில் அதிகரிக்கும். மக்கள் படும் துயரத்தை நான் நன்கு அறிவேன். அதற்கு நான் மன்னிப்பும் கேட்டிருக்கின்றேன். இருந்தாலும் நாம் ஒன்றிணைந்து தான் முன் செல்லவேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், குறிப்பாக கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது எனக்கிருந்த கூட்டங்களை நிறுத்திவிட்டு நான் பகல் வீட்டில் இருந்தேன்.
அன்று மாலை வேளை ஆகும் போது எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. ஆர்ப்பாட்டம் முடிந்து இந்த வழியாக செல்பவர்கள் கத்தி கூச்சலிட வாய்ப்பு உள்ளது ஆகவே வீட்டிலிருந்து வேறு இடத்திற்கு செல்லுமாறு காவல்துறையினர் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
அதனால் நானும் எனது மனைவியும் மாலை ஆனதும் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றோம். நான் வீட்டில் இருக்கும் போது தான் எனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. எனக்கிருந்தது ஒரே வீடு. அந்த ஒரே வீடு தான் இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
எனது பெறுமதியான சொத்து என்னுடைய நூலகம் தான். 2500 புத்தகங்களுக்கு மேல் இருந்தது. அனைத்தும் 200 வருடங்களுக்கு பழைமையான பெறுமதியான புத்தகங்கள். எந்நாளும் என் மனைவியால் தொடர்ந்தும் இவற்றை பாதுகாக்க முடியாது என்பதால் அனைத்தையும் பாடசாலை நூலகங்களுக்கு வழங்க முடிவு செய்திருந்தோம்.
நான் வைத்திருந்த பெறுமதியான அனைத்துமே இன்று இங்கு இல்லை. இப்படி வீடுகளை தீவைப்பது ஹிட்டலர் வாதத்தை கொண்ட மக்கள் மாத்திரமே.
இதற்கு பின்புலம் ஒன்று இருக்கின்றது. அன்று மாலை நேரத்தில் கட்சி தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று இருந்தது. நான் இருந்த இடத்தில் இருந்து zoom தொழில்நுட்பத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
அந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நிறைய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது. அரச தலைவர் பதவி விலகவேண்டும் என அனைவரும் கோரினர். புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
அந்த தருணத்தில் எதிர்க்கட்சியினருடைய கோரிக்கையாக அரச தலைவர் பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என தெரிவித்தனர். அது காலதாமதமாகும் என்பதால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து விட்டு நான் பின்னர் விலகுவதாக தெரிவித்தேன். காரணம் இந்த வாரமும் அடுத்தவாரம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளது.
எமக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வேண்டும், உணவு பெற்றுக்கொள்ளவேண்டும் . இப்படி அரசாங்கத்தை மாற்றி மாற்றி இருந்தால் அவை இல்லாமல் போகும். மீண்டும் அந்த சந்தர்ப்பங்கள் கிடைக்காது. இப்படியே காலம் தான் சென்றுகொண்டிருக்கும் என்று நான் தெரிவித்தேன். நிறைய வாதங்கள் இடம்பெற்றது.
அந்த கூட்டம் முடிய நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ரவூப் ஹக்கீம் ட்விட்டர் பதிவொன்றை பகிர்ந்திருந்தார். இதேவேளை பா.உ சுமந்திரன் அவர்கள் நான் பிரதமர் பதவியிலிருந்து விலக பின்வாங்குவதாக தெரிவித்திருந்தார்.
அப்பொழுது நான் தெரிவித்தேன், அப்படி இல்லை நான் விலக விருப்பம் ஆனால் அரசாங்கமொன்றை அமைத்து விட்டு நான் விலகுவேன் என்று தெரிவித்தேன். அவர் அதை தெரிவிக்கவில்லை என கூறினார்.
ஆனால் அந்த ஒரு ட்விட்டர் பதிவை சிரச ஊடகம் அனைத்து இடத்திலும் பிரபலப்படுத்தியது. ஏனைய ஊடகங்களும் அந்த பதிவை பற்றி பெரிதாக பேசியது. பின்னர் உடனே நான் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டேன்.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பலத்தை நிரூபிப்பேன் என தெரிவித்தேன். பின்னர் ஏனைய அனைத்து ஊடகங்களும் அதை வெளியிட்டது. இருந்தாலும் சிரச ஊடகம் இதை பெரிதாக மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தது.
நான் பல அறிக்கைகளை விடுத்தும் அவர்கள் அதை தெரிவிக்கவில்லை. நான் அவர்களுடைய பிரதிக்கும் தொடர்புகொண்டு பேசினேன். இதை செய்ய வேண்டாம் எங்கள் வீடுகளுக்கு தீ வைப்பார்கள் என்று கூறினேன். ஆனால் ஒன்றை கூட அவர்கள் செவிமடுக்கவில்லை. இதை தொடர்ந்தும் அவர்கள் செய்துகொண்டே சென்றார்கள்.
ஒரு கூட்டம் எங்கள் வீட்டை நோக்கி வந்த நிலையில் காவல்துறையினரால் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பின்னரும் மற்றுமொரு குழுவிற்கு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சிரச ஊடக வியலாளார் ஒருவர் கீழே விழுந்துள்ளார். அவர்கள் தாக்கியதாக கூறினார்கள். இருந்தாலும் நாம் அதற்கு கவலை வெளியிட்டிருந்தோம்.
அப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அவர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை பற்றி காவல்துறையினருக்கு கூறி விசாரணை ஒன்றை முன்னெடுத்திருக்க வேண்டும்.
சுற்று முற்றிலும் அனைவருக்கும் இங்கே வாருங்கள் இங்கே வாருங்கள் என அனைவரையும் அழைத்து வழிகளையும் காண்பித்து குழுக்களை வரவைத்தார்கள்.
அந்த குழுக்கள் வந்தவுடன் காவல்துறையினர் அவர்களை தாக்கினார்கள். கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். இறுதியாக துப்பாக்கி சூடு நடத்த இருந்தது. ஆனால் யாரையும் நாம் சுடவில்லை.
அவர்கள் வந்து வீட்டிற்கு வந்து தீ வைத்தார்கள். எனது வீடிற்கு மாத்திரமல்ல அரச தலைவர் மாளிகை , அரச தலைவர் செயலகம் என அனைத்தையும் கைப்பற்றி அங்கிருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டார்கள்.
சட்டத்திற்கு ஏற்ப தான் அரசாங்கம் இயங்க வேண்டும். அரசியலமைப்பிற்கு ஏற்றால்போலதான் நாம் செயற்படவேண்டும். அதை மீறி செயற்பட முடியாது. அதை காக்கவே நான் இங்கு உள்ளேன். எனவும் தெரிவித்துள்ளார்.
