மாறு வேடத்தில் நிதி சேகரிப்பு! காவல்துறையிடம் சிக்கிய போலி மத குரு
மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க குருக்கள் அணியும் ஆடையுடன் மாறு வேடத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டடுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நபர் ஒருவர் கத்தோலிக்க குருக்கள் அணியும் ஆடையான வெள்ளை அங்கி மற்றும் கறுப்பு பட்டி அணிந்தவராய் தன்னை ஒரு கத்தோலிக்க குருவாக காண்பித்து வீடுகளுக்கு சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மன்னார் ஆயர் இல்லம்
முத்தரிப்புத்துறை, வங்காலை போன்ற இடங்களில் அவர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குறித்த நபர் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு விதங்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

சில இடங்களில் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு துறவற சபைக் குரு என்றும் வேறு சில இடங்களில் வேறு சபைக் குரு எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த நபர் நானாட்டாவில் உள்ள வங்கி ஒன்றிலும் பணத்தை வைப்பில் இட்டுள்ள நிலையில், அவர் பற்றிய தகவல் மன்னார் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நானாட்டானில் இருந்து மன்னார் நகருக்கு அவர் பேருந்தில் வந்த வேளையில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்த காவல்துறையினர் அவர் உண்மையான குருவானவர் இல்லை என்பதையும் சிறியதொரு கிறிஸ்தவ சபை உறுப்பினர் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தடுத்து வைத்த காவல்துறையினர் , அடுத்த நாள் இவரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதேவேளை இவ்வாறானவர்கள் மட்டில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மன்னார் ஆயர் இல்லம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்தி - நயன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        