கிரிக்கெட் சபையில் தொடரும் குடும்ப நிர்வாகம் : குற்றம் சாட்டும் தேசிய மக்கள் சக்தி
இலங்கையில் குடும்ப ஆட்சி நடப்பதை போன்று கிரிக்கெட் சபையிலும் குடும்ப நிர்வாகம் நடப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
இதன்படி, சுமதிபால, தர்மதாஸ, ரணதுங்க ஆகிய குடும்பங்களே கிரிக்கெட் சபையை நிர்வகித்ததாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா விளையாட்டுத்துறை அமைச்சர் உண்மை நோக்கத்துடன் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்குள்ளான கிரிக்கெட் சபையை நீக்கி இடைக்கால குழுவை நியமித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இடைக்காலக்குழு
எனினும், அந்த இடைக்காலக்குழுவில் சிறிலங்கா நீதியமைச்சரின் மற்றும் ஆளுநரின் மகன்களை அவர் நியமித்தமை முறையற்றது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி புதிய விடயமல்ல எனவும், காலம் காலமாக இந்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி நடவடிக்கைகள் காரணமாக விளையாட்டு வீரர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி
அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச மட்ட போட்டிகளில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, சிறிலங்கா விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடியை பகிரங்கப்படுத்தியுள்ளதாகவும் விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளார்.