வேறு திருமணம் செய்த மனைவி - பிள்ளைகளை கொடுமைப்படுத்திய தந்தை
சிறுமிகளான தனது இரண்டு பிள்ளைகளை நாற்காலியில் நிற்க வைத்து, கழுத்தில் சுருக்கு மாட்டி புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படத்தை வட்ஸ் அப் மூலம் மனைவியின் தாயாருக்கு அனுப்பி, சிறுமிகளை கொடுமைப்படுத்திய நபர் ஒருவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் வசந்தா குணசேகர உத்தரவிட்டுள்ளார். வீரகுல, மங்களதிரிய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை ராகமை வைத்தியசாலையின் மனநல மருத்துவர் மூலம் பரிசோதித்து, மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதவான், மகர சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரின் மனைவி, தனது பிள்ளைகளை கைவிட்டு சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
5 மற்றும் 10 வயதான சிறுமிகள்
5 மற்றும் 10 வயதான சிறுமிகளை கொடுமைப்படுத்தி,புகைப்படம் எடுத்து மாமியாருக்கு அனுப்பிய புகைப்படமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மனைவியை மீண்டும் வீட்டுக்கு வரவழைக்க சந்தேக நபர், தனது பிள்ளைகளை இவ்வாறு கொடுமைப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீரகுல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
