மட்டக்களப்பில் பரபரப்பு : வெளிநாட்டில் மனைவிக்கு சித்திரவதை : குழந்தைகளுடன் வாவியில் குதிக்க முயன்ற தந்தை
மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து இரண்டு குழந்தைகளுடன் வாவியில் குதித்து உயிர்மாய்ப்பு செய்து கொள்ள முயற்சித்த தந்தை வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளதையடுத்து குறித்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுடன் கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதிக்க முயற்சித்துள்ளார்.
உடனடி நடவடிக்கை
இந்நிலையில் பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவர் கண்டு உடனடியாக செயல்பட்டு குழந்தைகளை பறித்து எடுத்துக் கொண்ட நிலையில் தந்தை வாவியில் குதித்ததையடுத்து அங்கு மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

நொச்சிமுனையைச் சேர்ந்த குறித்த நபரின் மனைவி வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் மனைவியின் சகோதரியின் அரவணைப்பில் 3 பிள்ளைகளும் வளர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ தினமான நேற்று மாலை 6.00 மணியளவில் மூத்த பிள்ளையை அங்கு விட்டுவிட்டு இரண்டாவது மூன்றாவது பிள்ளைகளை அங்கிருந்து அழைத்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் ஏற்றி கொண்டு கல்லடி பாலத்துக்கு சென்று பிள்ளைகளுடன் தவறான முடிவெடுக்க முயன்றுள்ளார்.
மனைவியை மாமாங்கத்தைச் சேர்ந்த சப் ஏஜென்சி போலி ஆவணங்களை தயாரித்து ஓமான் நாட்டுக்கு அனுப்பியுள்ளதுடன் அவருக்கு அங்கு ஒரு வேலைகளும் வழங்காது ஒரு அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வருவதாகவும் மனைவிக்கு கிழமையில் ஒரு நாள் கதைப்பதற்கு மாத்திரம் தொலை பேசியை வழங்குகின்றனர்.
எனவே அவரை மீட்க வேறு வழியில்லாமல் நான் உயிர்மாய்ப்பு செய்து தான் குடும்பத்தை மீட்க முடியும் என்றதனால் இதனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து காத்தான்குடி காவல்துறையினர் பிள்ளைகளையும் குறித்த நபரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |