அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை உரையுடன் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று(7) ஆரம்பமாகவுள்ளது.
இதனை தொடர்ந்து, அதிபரால் முன்வைக்கப்படும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் 8, 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
ஐந்தாவது கூட்டத்தொடரை அதிபர் ரணிலின் தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதுடன்,அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய காலை 10.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தையும் அதிபர் முன்வைக்கவுள்ளார்.
ஐந்தாவது கூட்டத்தொடர்
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் 2020 ஓகஸ்ட் 20 முதல் 2021 டிசம்பர் 12 வரையும்,இரண்டாவது கூட்டத்தொடர் 2022 ஜனவரி 18 முதல் 2022 ஜூலை 28 வரையும் இடம்பெற்றது.

மூன்றாவது கூட்டத்தொடர் 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி முதல் 2023 ஜனவரி 27 வரையும் இடம்பெற்றதுடன் நான்காவது கூட்டத்தொடர் 2023 பெப்ரவரி 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் 2024.01.26 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வரை நாடாளுமன்றம் 106 நாட்கள் கூடியிருந்தது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் நாடாளுமன்ற விசேட குழுக்கள், துறைசார் மேற்பார்வைக்கு குழுக்கள், உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் இணைப்புக் குழு தவிர்ந்த ஏனைய அனைத்துக் குழுக்களும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது மீண்டும் நியமிக்கப்படும்.
அமர்வுக்கான ஒத்திகை
இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு தொடர்பான ஒத்திகையொன்று நேற்று (6)நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

அதிபர் ரணிலின், நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        