டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பம் : எடுக்கப்பட்டது தீர்மானம்
புதிய இணைப்பு
நாடளாவிய ரீதியில் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சில் இன்று (2025.12.06) நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பாடசாலை அதிபர்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் (தேசிய மற்றும் மாகாண) அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தின் போது பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அதன்படி, “அனைத்து தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளும் டிசம்பர் 16 அன்று திறக்கப்பட வேண்டும். அன்று திறக்க முடியாத பாடசாலைகளுக்கான தொடக்க நாளை நிர்ணயிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கும் மாகாண, வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
சாதாரண தர பரீட்சை
டிசம்பர் 16 அன்று ஆரம்பிக்கும் பாடசாலைகளுக்கு வருட இறுதி விடுமுறை டிசம்பர் 23 முதல் வழங்கப்படும். டிசம்பர் 16 முதல் 22 வரையான காலப்பகுதியில் பாடசாலை சுத்தம், பராமரிப்பு, மீளமைப்பு பணிகள், வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் காணல், அவர்களுக்கு தேவையான மனநல மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை ஏற்பாடு செய்தல் அல்லது சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பரிந்துரை செய்தல் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து பாடசாலைகளுக்கும் 2026 கல்வியாண்டு ஜனவரி 01 அன்று தொடங்கப்படும். கல்வியாண்டு தொடங்கியவுடன், 2025 சாதாரண தர பரீட்சைக்கு (O/L) தோற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தவணைப் பரீட்சை நடத்தப்படும்.

பிற வகுப்புகளுக்கான தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டுமா என்பதற்கான முடிவு அதிபர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்படுகிறது. பரீட்சை நடத்தப்பட்டாலோ இல்லையோ, அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்குத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
பரீட்சைத் திணைக்களத்துடன் ஆலோசித்து 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர (A/L) மீதமுள்ள பாடங்களை மிக விரைவில் நடத்தும் திகதியை நிர்ணயித்தல்.
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர மீதமுள்ள பாட பரீட்சைகளுக்கான கால அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு, 2026 கல்வியாண்டு ஆரம்பிக்கும் நாள் மற்றும் வருடாந்த கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.” ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று
நாட்டில் நிலவிய பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி இன்று (08) தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சில் (MOE) இன்று நடைபெறும் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ (Nalaka Kaluweva) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் 500க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 100,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை புத்தகங்கள் சேதம்
நிலச்சரிவு காரணமாக இறந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரங்கள் இன்னும் பெறப்படவில்லை, பல மாணவர்களின் அனைத்து பாடசாலை புத்தகங்கள், பைகள் மற்றும் காலணிகள் சேதமடைந்துள்ளன.

பதுளை, அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி மற்றும் பிற பகுதிகளில் சேதமடைந்த அனைத்து பாடசாலைகளும் தற்போது திருத்தம் செய்யப்பட்டு வருவகின்றது.
பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களின் மன நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.” என தெரிவித்தார்.
இதற்கிடையில், நாட்டில் 275,000க்கும் மேற்பட்ட பாடசாலை குழந்தைகள் டித்வா சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |