தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும்
தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது தமிழ் மக்கள் அனைவரினதும் கடமையாகும் என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு வடிவமும் வருமாறு
தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் மக்கள் மயமாதல் என்ற நிலையிலிருந்து சர்வதேசமயமாதல் என்ற நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
லண்டனிலும், தமிழ்நாட்டிலும் கண்டன போராட்டங்கள்
லண்டனிலும், தமிழ்நாட்டிலும் இது தொடர்பாக கண்டன போராட்டங்கள் இடம்பெற்றுள்ளது. கனடாவில் போராட்டத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

தாயகத்தில் போராட்ட சூழல் அதிகரிக்கும்போது தமிழ்நாட்டின் ஏனைய இடங்களிற்கும், பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா போன்ற புலம்பெயர் மக்கள் வாழும் நாடுகளிற்கும் போராட்டம் பரவலாம்.
எல்லாவற்றிற்கும் முக்கியம் தாயகத்தில் இப் போராட்ட சூழலை அணைய விடாமல் வைத்திருப்பது தான். தாயகத்தில் தற்போது சகல மட்டங்களிற்கும் பரவத் தொடங்கியுள்ளது.
நீதிமன்றங்களில் இதன் சகல பரிமாணங்களும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. மூன்று சட்டத்தரணிகளும் வெவ்வேறு கோணங்களில் இதனை விவாதத்திற்குள்ளாக்கியுள்ளனர்.
சுமந்திரன் சட்ட விரோத கட்டிடத்தை அகற்றும் அதிகாரம் பிரதேச சபைக்குரியது சட்டத்தை நடைமுறைப்படுத்த முனையும் போது காவல்துறையினர் சட்ட விரோதமாக நடந்து கொள்கின்றார்கள் என்ற வகையில் விவாதத்தினை கொண்டு சென்றார்.
சட்டத்தரணி சிறீகாந்தா அரசாங்கம் மாறினாலும் அமைதிவழி போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை மாறவில்லை என்ற வகையில் விவாதத்தினை கொண்டு சென்றார்.
சட்டத்தரணி குருபரன் போராட்டக்காரார்கள் மீது காவல்துறையினர் பொதுத்தொல்லைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தமை அடிப்படை உரிமை மீறல்களை தாம் செய்யாமல் நீதிமன்ற கட்டளை மூலம் நிறைவேற்றும் உத்தியாக உள்ளது என்ற வகையில் விவாதத்தைக் கொண்டு சென்றார்.
இவ்வாறு மூன்று வகைகளில் விவாதங்களை நடாத்தியமை விவகாரத்தின் பல் பரிமாணத்தை வெளிக்காட்டுவதாக அமைந்தது.
நாடாளுமன்றத்தில் சிறீதரனின் விலாவாரியான விளக்கம்
நாடாளுமன்றத்தில் சிறீதரன் போராட்டத்தின் போது காவல்துறையினரின் அத்துமீறல்களை விலாவாரியாக எடுத்துக் கூறினார். துரதிஷ்டவசமாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரனுடன் ஒத்துழைத்தமை போதாதாக இருந்தது.

பிரித்தானிய தூதரகம் உட்பட பல வெளிநாட்டுத் தூதரகங்கள் தையிட்டி விவகாரம் தொடர்பாக அரசாங்க்தை நோக்கி கேள்விகளைக் கேட்டுள்ளன. உண்மையில் இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது போராட்டக்காரார்கள் மீது டிசம்பர் 21 ம் திகதி காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் தான்.
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையாக பரிணமிப்பு
அரசாங்கம் இந்த விவகாரத்தை காணி உரிமையாளர்களுக்கும் பௌத்த விகாராதிபதிக்குமிடையிலான பிரச்சினையாக சுருக்க முற்பட்டபோதும் இது தமிழ் மக்களின் பொதுப்பிரச்சனை என்ற வகையில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையாக பரிணமித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மூன்று கோட்பாட்டு விடயங்கள் முக்கியமானவையாகும். இதில் முதலாவது இது தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையாகும். இரண்டாவது இது சிறீலங்கா அரசினுடைய இன அழிப்பு அரசியல் நிகழ்ச்சி நிரலின் தொடர் நிகழ்வு ஆகும். மூன்றாவது இது சட்டப் பிரச்சினையல்ல ஒரு அரசியல் பிரச்சினையாகும். அரசியல் நோக்கம் கருதியே இந்த விகாரை கட்டப்பட்டது என்ற விடயம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அரசியல் பிரச்சினை என்ற வகையில் தான் பொதுமக்கள் போராடுகின்றனர். தாயகத்தில் மட்டுமல்ல உலகு தழுவிய வகையில் போராடுகின்றனர்.
விகாரையை அகற்ற வேண்டும் என்ற ஒற்றைக் கோசத்தை தவிர வேறு எதுவும் தற்போது மேலெழுவதில்லை. இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி தான் அனைத்து ஆக்கிரமிப்புக்களினது திறவுகோலாக எதிர்காலத்தில் அமையப் போகின்றது.
சென்ற ஆண்டின் தொடர்ச்சியாக இந்த ஆண்டிலும் முன்னெடுக்கப்படும் போராட்டம் இதுதான்.
பொதுவாக அரசியல் பிரச்சினை என்பது வந்த பின்னர் காணி உரிமையாளர்கள் மட்டும் பேச்சுவார்த்தையைக் கையாளக் கூடாது. அதற்காக ஆற்றலும் காணி உரிமையாளர்களுக்கு இருக்கும் எனக் கூற முடியாது. காணி உரிமையாளர்கள் தனியாக இவ் விவாகரத்தை கையாண்டு அரசாங்கத்தின் சதி வலைக்குள் போராட்டம் மாட்டுப்படக்கூடாது.
பேச்சுவார்த்தையைக் கையாள்வதற்கென அரசியல் கட்சிகள் சிவில் சமூகத்தைச் சேர்ந்த துறை சார் நிபுணர்கள், காணி உரிமையாளர்கள் என்போரை உள்ளடக்கிய குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பேச்சுவார்த்தையை கையாள்வதே ஆரோக்கியமான நகர்வாக இருக்கும்.
சர்வதேச மயப்பட்ட விவகாரம்
தற்போது விவகாரம் சர்வதேசமாகிய பின்னர் அரசாங்கம் நன்றாக ஆடிப்போய்விட்டது. தையிட்டி விகாராதிபதி பல படிகள் கீழே இறங்கி வந்துள்ளார். சமரச முயற்சிகளுக்காக பலவழிகள் திறந்து விடப்பட்டுள்ளன.

ஒரு பக்கத்தில் யாழ் அரசாங்க அதிபர் காணி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகின்றார். இன்னோர் பக்கத்தில் யாழ் காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், வேலன் சுவாமிகள் போன்ற சிவில் சமூக பிரதிநிதிகளுடன் உரையாடுகின்றனர்.
கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்கலாம். விகாரைக் காணி தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவிக்கலாம் என்ற யாழ் அரசாங்க அதிபரின் யோசனைகள் தற்போது மக்களினாலும் காணி உரிமையாளர்களினாலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் முதலில் காவல்துறையினரைக் கொண்டு போராட்டத்தை அடக்கப்பார்த்தது. அது முடியாத போது சமரச முயற்சியில் இறங்கத் தொடங்கியுள்ளது.
நயினாதீவு விகாராதிபதியும் நாகவிகாரை விகாராதிபதியும் மக்களின் பக்கம் நிற்கின்றமை போராட்டத்தை வலுவடையச் செய்துள்ளது.
போராட்டத்தின் இன்னோர் பரிணாமமாக கந்தரோடை விகாரை என்ற பெயர்ப் பலகையை வலிகாமம் தெற்கு பிரதேச சபை அகற்றியுள்ளது. இதற்கு பதிலாக கந்தரோடை தொல்பொருள் ஆய்வு நிலையம்” என்ற பெயர் பலகையை நிறுவியுள்ளது.
எங்காவது தொல்லியல் எச்சங்கள் இருந்தால் அது தொல்லியல் எச்சங்களாக பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர விகாரைகளைக் கட்டி ஆக்கிரமிக்க முடியாது என்ற செய்தியை பெயர்ப் பலகை அகற்றல் சொல்லியுள்ளது. உள்ளூராட்சிச் சபைகள் தற்போது தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், புலம்பெயர் அமைப்புகள் என்பவற்றிற்கு கூட்டுக்கடமைகளும் கூட்டுப்பொறுப்புக்களும் உள்ளன. இதில் அரசியல் கட்சிகளுக்குரிய பொறுப்புகளும் கடமைகளும் மிகவும் முக்கியமானவையாகும்.
ஒரு சமூகத்தின் தலையே அரசியல் தலைமை தான். அவர்கள் தான் மக்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். தையிட்டி விவகாரத்தை அரசியல் களங்களுக்கு கொண்டு செல்லும் பணி அரசியல் கட்சிகளுக்குரியவையாகும்.
நாடாளுமன்றம், உள்ளூராட்சிச் சபைகள் என்பவற்றில் இதனை பேசு பொருளாக்குவதுடன் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள், என்பவற்றின் கவனத்திற்கும் விவகாரத்தை கொண்டு செல்லும் பணி இவர்களுடையதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக தாயகத்தில் இவ் விவாகரம் தொடர்பாக ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய பொறுப்பு இவர்களுக்குரியது.
விவகாரத்தை மையப்படுத்திய செயற்பாடுகள் ஒரு அதிகார மையத்திலிருந்து நகர்வதாக இருக்க வேண்டும்.
அந்த மையம் அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புகளையும் இணைத்ததாக இருத்தல் வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ஒருங்கிணைவுச் செயற்பாடு மிகவும் பலவீனமாக உள்ளது.
நீண்ட காலமாக இந்த விவகாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே முன்னெடுத்திருந்தது. தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெளியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. தற்போது தமிழரசுக் கட்சி சிறிது அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது.
கட்சியின் அதிகாரத்திலுள்ள வலிவடக்கு பிரதேச சபை சில முன்னெடுப்புகளைச் செய்தது. சுமந்திரன் நீதிமன்றச் செயற்பாடுகளில் பங்கேற்றார். பெரிய கட்சி என்ற வகையில் இப் பங்கேற்பு போதுமானதல்ல. வலிவடக்கு பிரதேச சபையைத் தவிர ஏனைய பிரதேச சபைகள் இதில் பங்கெடுத்தமை குறைவு. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ் இதில் பங்கேற்ற போதும் அவர் தன்னை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக அடையாளம் காட்டுவதில்லை. போராட்டம் மக்கள் மயமானதைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கௌரவமாக தன்னை முதன்மைப்படுத்துவதிலிருந்து பின்வாங்கியுள்ளது.
சுமந்திரனின் கொழும்பு மைய அரசியல்
இது ஒருங்கிணைவு அரசியலுக்கான நல்ல அறிகுறியேயாகும். ஒருங்கிணைவு அரசியல் முன்னேறாமைக்கான காரணம் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி விலகி நிற்பதேயாகும். இவ்வாறு விலகி நிற்பதற்கு சுமந்திரன் எனற தனி நபர் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே காரணமாகும்.

சுமந்திரன் ஒருங்கிணைவு அரசியலை மறுப்பதற்கு அவரது கொழும்பு மைய அரசியலே காரணமாக உள்ளது. சுமந்திரனின் இருப்பு கொழும்பில் மையங்கொண்டுள்ளதாலும், தமிழ்த் தேசிய அரசியலோடு ஒரு ஒவ்வாமை அவருக்கு இருப்பதானாலும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியில் அவர் நிற்கின்றார்.
உண்மையில் சுமந்திரன் கொழும்பு மைய அரசியலை கைவிட்டு தாயக மைய அரசியலைப் பின்பற்றுவாராக இருந்தால் ஒருங்கிணைவு அரசியல் சீராக முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
நாடாளுமன்றத்தில் சிறீதரனும், கஜேந்திரகுமாரும் மட்டுமே இவ் ஆக்கிரமிப்புக்கள் பற்றி அதிகம் பேசுகின்றனர். செல்வம் அடைக்கலநாதன் எல்லாவற்றிலும் நழுவி ஓடுகின்ற அணுகுமுறையினையே பின்பற்ற பார்க்கின்றார். நாடாளுமன்றத்தில் தமிழ்க் கட்சிகள் கூட்டாக ஆக்கிரமிப்பு விவகாரத்தை முன்னெடுத்திருந்தால் அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்ற அழுத்தத்தை அதிகரிக்கச் செய்திருக்கலாம்.
தேசமாக அழுத்தம் கொடுத்தல் என்பது அங்கு இடம் பெறவில்லை. வெளிநாட்டுத் தூதுவராலயங்களை அணுகுகின்ற போது தேசமாக அணுகுதலே ஆரோக்கியமான பயன்களைத் தரக்கூடியதாக இருக்கும்.
தமிழர் தரப்பிற்கு கிடைத்த மூன்று சந்தர்ப்பங்கள்
வரலாறு அவ்வப்போது சந்தர்ப்பங்களைத் தரும் அதனை ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் இவர்களை மன்னிக்காது. கடந்த ஆண்டு தமிழ் மக்களின் விவாகரத்தை தேசமாக முன்னெடுப்பதற்கான மூன்று சந்தர்ப்பங்கள் அரசியல் சக்திகளுக்கு கிடைத்திருந்தன.

செம்மணி விவகாரம், வவுனியா வடக்கு திரிவைத்தகுளம் ஆக்கிரமிப்பு விவகாரம், தையிட்டி விவகாரம் என்பனவே அந்த மூன்று சந்தர்ப்பங்களுமாகும்.
இந்த மூன்று சந்தர்ப்பங்களையும் அரசியல் கட்சிகள் ஒழுங்காக பயன்படுத்தவில்லை என்றே கூற வேண்டும் . செம்மணி விவகாரம் தாயகம், சிறீலங்கா சர்வதேசம் என்ற மூன்று தளங்களிலும் பேசு பொருளான போது இக்கட்சிகள்; அறிக்கைகளுடன் மட்டும் தமது பணிகளை நிறுத்திக் கொண்டன.
ஒருங்கிணைந்த அரசியல் இயக்கம் இருந்திருக்குமாயின் அது தொடர்பாக நிறைய செயற்பாடுகளை முன்னெடுததிருக்கலாம். அகழ்வுகளை கண்காணித்தல் , அகழ்வு எச்சங்களை பேசு பொருளாக்கல் , விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லல் என பல பணிகள் அன்று காத்திருந்தன.
இப்பணிகள் பெரியளவிற்கு நகரவில்லை. அரசியல் தலைமை இதனை கையிலெடுக்காததினால் கண்காணிப்பு செயற்பாட்டை முன்னெடுத்த யாழ் சட்டத்தரணிகள் சங்கமும் தொடர்ந்து தனது பணிகளை முன்னெடுக்கவில்லை.
தற்போது அனைத்துமே கிடப்பிற்கு சென்ற நிலையே காணப்படுகின்றது. அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் இணைந்து செம்மணி விவாகரத்தை முன்னெடுப்பதற்கான அமைப்பை உருவாக்கியிருந்தால் பணிகள் முன்னோக்கி நகர்ந்திருக்கும்.
வவுனியா வடக்கு திரிவைத்த குளம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயற்பட்டிருந்தால் ஆக்கிரமிப்பை தடுத்திருக்கலாம்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் வன்னியில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும் ரவிகரன் தனித்தே அந்த விவாகரத்தை முன்னெடுத்திருந்தார். சத்தியலிங்கம் ஒரு சில அறிக்கைகளுடன் தனது கடமைகளை நிறுத்திக் கொண்டார். கனவான் அரசியலை அவர் முன்னெடுக்க முனைகின்றார்.
வன்னி போன்ற நெருக்கடிகளைச் சந்திக்கின்ற மாவட்டங்களுக்கு கனவான் அரசியல் ஒருபோதும் பலனளிக்கப் போவதில்லை. இத்தனைக்கும் திரிவைத்தகுளம் இவரது வவுனியா தொகுதிக்குள்ளேயே உள்ளது. செல்வம் அடைக்கலநாதன் அறிக்கைகளை கூட விட்டதாகத் தெரியவில்லை.
தமிழரசுக் கட்சியின் ஏனைய தரப்புக்களோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ போதிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அதன் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் மட்டும் சில முயற்சிகளை ரவிகரனோடு கூட்டாக மேற்கொண்டிருந்தார். விவாகரத்தை பேசு பொருளாக்குவதில் அவரது பங்கும் கணிசமானளவு இருந்தது.
சிவில் அமைப்புகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சற்றுப் பலமாக இருந்தன. வன்னி மாவட்டத்தில் அவையும் பலமாக இல்லை. இந்த ஒத்துழைப்பின்மை காரணமாக ரவிகரன், தவபாலன் போன்றவர்களினாலும் ஒரு எல்லைக்கு அப்பால் நகர முடியவில்லை. விளைவு ஆக்கிரமிப்பாளர்கள் பயிர் விளைவிக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.தமிழ்த் தரப்பு வவுனியா வடக்கு ஆக்கிரமிப்பினை கோட்டை விட்டுள்ளது என்றே கூற வேண்டும்.
செம்மணி, வவுனியா வடக்கு விவகாரங்களுடன் ஒப்பிடும்போது தையிட்டி விவகாரம் சற்றுப் பாதுகாக்கப்பட்டுள்ளது எனக் கூறலாம். இதற்கு மூன்று தரப்புக்கள் காரணமாக இருந்தன.
காணி உரிமையாளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், சிவில் தரப்பினர் என்போரே அவ் மூன்றுமாவர்.
வேலன் சுவாமிகள் போன்ற சிவில் தரப்பினர்
காணி உரிமையாளர்கள் விகாரை அகற்றப்படல் வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போராட்டத்தை நடாத்தி மக்களின் பயத்தை போக்கியது. வேலன் சுவாமிகள் போன்ற சிவில் தரப்பினர் இதற்கு வெகுஜன முகத்தைக் கொடுத்தனர்.

இந்த நிலைமை தமிழரசுக் கட்சியையும் வெளியில் நிற்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.
மொத்தத்தில் முன்னர் கூறிய போல தையிட்டியே அனைத்து ஆக்கிரமிப்புகளின் திறவுகோலாக இருக்கப் போகின்றது. எனவே விகாரை அகற்றப்படும் வரை நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது தமிழ் மக்கள் அனைவரினதும் கடமையாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 12 மணி நேரம் முன்