ஐவர் படுகொலை : சம்மந்தப்பட்ட சந்தேகநபர்கள் பயணித்த வீதிகளை அடையாளம் கண்டுள்ள காவல்துறை!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த - கஹவத்தை பகுதியில், அண்மையில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் சென்ற வீதிகளை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள், பெலியத்த, ஹக்மன, கம்புருபிட்டிய மற்றும் அக்குருஸ்ஸ ஊடாக பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்குருஸ்ஸ - பங்கம பகுதியிலும் யக்கலமுல்ல பகுதியிலும் அவர்கள் சுற்றித்திரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காணொளி காட்சிகள் கிடைத்துள்ளது
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களில் ஒருவர் கம்புருப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் ஜீப்பில் இருந்து இறங்கும் சிசிடிவி காணொளி காட்சிகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த சந்தேக நபர் தமது முதுகில் ஒரு பையை சுமந்து சென்றுள்ளதுடன் அவர் பயணித்த இடங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ள காணொளி காட்சிகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
பல கோணங்களில் விசாரணை
அத்துடன் ஜீப் ரக வாகனத்தில் இருந்து வெளியே வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஒரே நேரத்தில் 2 தோட்டாக்கள் வெளியேறும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய பகுதியிலுள்ள விகாரையில் பிக்கு ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயணித்த மகிழுந்தும் எரியுண்ட நிலையில் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்