முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகின்றமையால் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முத்துஐயன்கட்டுகுளத்தின் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ரேடியல் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு வெளியிட்ட அறிவிப்பில், நயினாமடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால், முத்துஐயன்கட்டு குளத்தின் ரேடியல் கதவுகள் தொடர்ச்சியாக திறந்த நிலையில் வைக்கப்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதன் காரணமாக, கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பாக மன்னாகன்டல் - வசந்தபுரம் பகுதிகளில் உள்ளவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நீர்மட்டம் உயர்வதை கவனித்தால், உடனடியாக கிராம அலுவலர் அல்லது பிரதேச செயலாளர் அவர்களுக்கு தகவல் வழங்கி, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்.
அதேபோன்று, பண்டாரவன்னி பகுதிகளில் வசிக்கும் மக்களும் கவனமாக இருக்க வேண்டும். வவுனியா வடக்கு பகுதிகளில் பெய்து வரும் மழையால் குறிவிச்சை ஆற்றில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
நீர்மட்டம் உயர்வதை நீங்கள் கவனித்தால், உடனடியாக கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் அவர்களுக்கு தகவல் வழங்கி,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்