பிரித்தானியர்களுக்கு திண்டாட்டம்..! 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெருக்கடி
பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள், கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத வகையில் துரிதமாக அதிகரித்துள்ளதால், மக்கள் வாழ்க்கை செலவு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவின் பணவீக்கமானது 40 ஆண்டுகளின் பின்னர் 10 வீதத்தை கடந்து கடந்த ஜுலை மாதம் 10.2 வீதமாக பதிவாகியிருந்தது.
எனினும் பொருளாதார நிபுணர்கள் பணவீக்கமானது 9.9 வீதமாக தொடர்ந்தும் காணப்படும் என கணித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்ததை விட 0.2 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலையேற்றம்
உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக பணவீக்கமானது இரண்டு இலக்கத்தை மீண்டும் தொட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அறிவிக்கப்பட்ட பல்வேறு வரிக் குறைப்பு திட்டங்களை மீளெடுத்துள்ளதால் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கியிருக்கும் லிஸ் ட்ரஸ்சிற்கு, பணவீக்க அதிகரிப்பும் நெருக்கடியை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் தமது நிதி நிலைமைகள் மிகவும் மோசமடையும் என பிரித்தானியாவிலுள்ள அரைவாசிக்கும் அதிகமான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பாண், தானியங்கள், இறைச்சி மற்றும் பால் பொருட்களின் விலைகள் அனைத்தும் உயர்வடைந்துள்ள நிலையில், 1980 ஆம் ஆண்டுகளின் பின்னர் உணவுப் பணவீக்கமானது கடந்த செப்டம்பர் மாதம் 14.5 வீதமாக உயர்வடைந்துள்ளது.
பணவீக்க உயர்வு
மக்கள் அதிகமான எரிசக்தி மற்றும் போக்குவரத்து கட்டணங்களை சமாளிப்பதற்கு போராடிவரும் நிலையில், இந்த உணவு பணவீக்க உயர்வு ஏற்பட்டுள்ளது.
மீன், சீனி, பழங்கள் மற்றும் அரிசி உட்பட சராசரி குடும்பங்களின் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய பொருட்களின் விலைகள் கடந்த மாதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இடம்பெறும் போரினால் தானியம், எண்ணெய் மற்றும் உரம் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில், பலசரக்கு பொருட்களின் விலைகள் துரிதமாக உயர்வடைந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
