உச்சநீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு திருச்சி சிறப்பு முகாமில் கட்டாய நாடுகடத்தல் அரங்கேறுகிறதா...
திருச்சி மத்திய சிறை வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு பல்வேறு அநீதீகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த முகாமில் இருந்து கிருஷ்ணகுமார் என்ற இலங்கைத் தமிழர் நாடுகடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கிருஷ்ணகுமார் தனது சொந்த விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் இலங்கைக்குத் திரும்பியதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
முகாம் வாசிகள்
ஆனால், உண்மைப் பின்னணி முற்றிலும் வேறானது என முகாம் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை தூதரகம், இலங்கை உளவுத்துறை, இந்திய உளவுத்துறை மற்றும் தமிழக காவல்துறை ஆகியவை இணைந்து கிருஷ்ணகுமாரை நாடுகடத்த அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேபோல், தற்போதும் முகாமில் உள்ள சுபாஸ்கரன் என்ற மற்றொரு ஈழத்தமிழருக்கும் இதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தை முன்னிறுத்தி, திருச்சி சிறப்பு முகாமிற்குள் தற்போது காவல்துறை பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகிறது.
மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டிருக்கும் இந்த முகாம், தங்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு கொடூரமான தனிச்சிறை போலவே நடத்தப்படுவதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
முகாமில் உள்ள அகதிகளை சட்டத்தரணிகளோ அல்லது அவர்களது சொந்த உறவினர்களோ நேரில் சந்திக்க அனுமதிப்பதில்லை. வெளி உலகத்துடன் பேசுவதற்கான எவ்வித தொலைபேசி வசதிகளும் இன்றி அவர்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
[
]விடுதலை செய்யப்பட்ட பிறகும் சிறை
வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும், அல்லது சிறை தண்டனை காலம் முடிந்த பிறகும் கூட, சுமார் 10 முதல் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ளவர்கள் விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி முகாமில் எஞ்சியிருக்கும் 5 அல்லது 6 போராளிகளையும் அடுத்த 2 மாதங்களுக்குள் இலங்கைக்கு நாடுகடத்த இரு நாட்டு தரப்புக்களும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
முகாமில் இருந்து நாடுகடத்தப்படும் நபர்களுக்கான விமான டிக்கெட் கட்டணத்தை அவர்களிடமிருந்தே வாங்கும் அதிகாரிகள், அதுபோக அவர்களிடம் இருக்கும் எஞ்சிய தொகையையும் பெற்றுக்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது..
சுமார் இந்திய மதிப்பில் 38,000 முதல் 40,000 வரை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, லங்கைக்குச் சென்றால் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும், அகதிகளை 'சிங்கத்தின் வாயில் தூக்கிக் கொடுப்பது போல' கட்டாயப்படுத்தி அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது.
ஒருவரது சொந்த விருப்பம் இல்லாமல் அவரை எந்த நாட்டிற்கும் கட்டாயப்படுத்தி நாடுகடத்தக் கூடாது என இந்திய உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
எனினும், முகாம் கைதிகளுக்கு நீதிமன்றத்தை நாடும் வசதிகள் இல்லாததை அதிகாரிகள் சாதகமாக்கிக் கொள்வதாக கூறப்படுகிறது.
இலங்கை அரசு, புலம்பெயர் தமிழர்களை மீண்டும் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தாலும், மறுபுறம் விமான நிலையத்திலேயே அவர்களைக் கைது செய்யும் இரட்டை வேடத்தை அரங்கேற்றி வருவதாக இலங்கையில் தமிழ் அரசியல் தலைமைகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இந்தச் சட்டவிரோத மற்றும் மனிதநேயமற்ற நாடுகடத்தலுக்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உலகத் தமிழர்களும் சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் முகாம் வாசிகள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |