அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை: முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி
இலங்கையில் உள்ள ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் சம்பளமற்ற விடுமுறை வழங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு பணிமூப்பு பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகபட்சமாக 5 வருடங்களுக்கு உட்பட்ட சம்பளமற்ற விடுமுறையை உள்ளூரிலேயே வழங்குவது தொடர்பான சிபாரிசுகளை வழங்குவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
குறித்த குழு முன்வைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கழிவுப் பொருட்களை அகற்றுதல்
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மற்றுமொரு முன்மொழிவான அரச நிறுவனங்களில் உள்ள பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்கள் அகற்றுவதை உறுதி செய்வதற்கான குழு நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் குவிந்துள்ள பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை (Scrap Material) அகற்றுவதை துரிதப்படுத்த அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை அகற்றும் முழு செயல்முறையையும் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்டம்
ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2022 இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
திறைசேரியின், கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின், கொம்ப்ரோலர் ஜெனரல் ரம்யா காந்தியின் தலைமையில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, திறைசேரியின், அரச நிதித் திணைக்கள, மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.யு. சந்திரகுமாரன் மற்றும் திறைசேரியின், அரசுடமை நிறுவனத் திணைக்கள, மேலதிக பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.எஸ்.என். ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

