அந்நியச் செலாவணி போதுமானதாக இல்லை - ஒவ்வொரு வருடமும் கடன் வாங்க வேண்டியுள்ளது..! ரணில் பகிரங்கம்
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது கிருமித் தொற்று நீக்கிய, திரவ மருந்து உற்பத்தி தொழிற்சாலையை இன்று (10) கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நல்ல பொருளாதாரக் கொள்கையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் இருக்க வேண்டும்,
தேசிய சபையை ஒரு தளமாகக் கொண்டு தேசிய கொள்கைக் கட்டமைப்புக் குறித்து கலந்துரையாட ஒன்றாக இணைவோம்.
போட்டி மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரமொன்றை உருவாக்கும் தேசிய கொள்கையொன்றை உருவாக்க தாம் செயற்பட்டு வருகிறோம்.
கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை
நமது வரவு செலவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.
நமக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி நமது தேவைக்கே போதுமானதாக இல்லை. அதனால் ஒவ்வொரு வருடமும் கடன் வாங்க வேண்டியுள்ளது. இப்போது கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம்.
நமது பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். நமக்குத் தேவையான அன்னியச் செலாவணியை நாம் ஈட்ட வேண்டும். அந்நிய செலாவணி பற்றாக்குறையுடனோ வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையுடனோ இருக்க முடியாது.
வரவுசெலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை வைத்திருப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
அவ்வாறாயின் நமது வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு நாம் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யும் பொருட்கள், பயிரிடும் பயிர், வழங்கும் சேவைகளை அதிகரிக்க வேண்டும். மிகவும் போட்டித் தன்மை கொண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் ஒன்றே நமக்குத் தேவை", எனக் குறிப்பிட்டார்.
