சிறிலங்காவில் வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா அராசாங்கம் வலியுறுத்தி வரும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு கட்டானை பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் முகாமைத்து பணிப்பாளராக இருக்கும் சர்வதேச முதலீட்டாளர் மீதே அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நீர்கொழும்பு கட்டானை படல்கம காவல்துறை பிரிவிலுள்ள கோப்பியவத்தை பிரதேசத்தில் Al-Obaidani Apparels என்ற ஒமான் நாட்டு முதலீட்டாளருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.
ஓமான் முதலீட்டாளர் மீது தாக்குதல்
அந்த தொழிற்சாலையின் முகாமைத்துவ பணிப்பாளரான ஓமானை சேர்ந்த Khalfan Salim Said Al Obaidani என்பவர் நேற்று இரவு 10. 42 மணியளவில் அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவரது வீட்டிற்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்த இருவரும் ஸ்ரீ ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை வளாகத்திற்குள் அவரது வீடு அமைந்துள்ளதுடன் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றினையும் சேதப்படுத்தியுள்ளனர்.
அரசியல்வாதியின் ஆதரவிலேயே தாக்குதல்
12 ஏக்கர் காணியில் அமைந்துள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலையில் 350 இற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். குறித்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் ஓமானிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
மேலும் குறித்த முதலீட்டாளர் இலங்கைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக படல்கம காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
