புலம்பெயர் தமிழர்களை அழைக்கும் இலங்கை! நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துமா ரணில் அரசாங்கம்
தேசிய இனப்பிரச்சினையை உருவாக்கிவிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகளினாலேயே ஏராளமான தமிழர்கள் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே, புலம்பெயர் உறவுகளின் உதவிகளை இலங்கை அரசு பெற விரும்பினால் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை முன்வைப்பதுடன் தனது நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும்.
ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக குறிக்கப்பட்ட சில புலம்பெயர் அமைப்புக்கள மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியுள்ளதாக அரசு வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
ரணில் - மைத்திரி அரசாட்சி
தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றும் சில கட்சிகளும் அமைப்புகளும் இதனை வரவேற்றுள்ள அதேவேளை, பலர் இந்த அறிவித்தல் தொடர்பில் அரசின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த ரணில் - மைத்திரி அரசாட்சியின்போது, இந்தத் தடைகள் நீக்கப்பட்டிருந்த போதிலும் கூட, கோட்டாபய ராஜபக்ச அரசில் மீண்டும் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டன.
இது ஒருபுறமிருக்க, ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்ற காலங்களில், இலங்கை அரசு இவ்வாறான சில அறிவித்தல்களை வெளியிடுவதும் ஒரு நடைமுறையாக இருக்கின்றது.
இலங்கை இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றது. ஒன்று பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையில் இருக்கின்றது. அந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவையாக இருக்கின்றது.
அவ்வாறான நிதிநிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதும் அதே சமயம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகம் போன்றவற்றைத் திருப்திப்படுத்துவதும் இலங்கைக்கு முக்கியத் தேவைகளாக இருக்கின்றது.
ஆகவே, புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் என்பது அரசு தன்னைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகவே தோற்றம் அளிக்கின்றது.
13ஆவது திருத்தத்தினை மறுப்பது
இலங்கை அரசு பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தாலும் அந்த உறுதிமொழிகளிலிருந்து பல சந்தர்ப்பங்களிலில் பின்வாங்கியிருக்கின்றது.
தமிழ்த் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டதும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்து வைத்ததன் பின்பாக, அந்த ஒப்பந்தத்தின் பல சரத்துக்களை ஒரு தலைப்பட்சமாகவே விலக்கிக்கொண்டதும், குறிப்பாக 13ஆவது திருத்தத்தில் உள்ள அம்சங்களையே நடைமுறைப்படுத்த மறுப்பதும், இவற்றுக்கு நல்ல உதாரணங்களாகும்.
ஆகவே, இன்று ஒருசில அமைப்புக்கள் மீது நீக்கப்பட்ட தடையை, வரப்போகின்ற புதிய அரசு விலக்கிக்கொள்ளமாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அரச பயங்கரவாதம்
இந்த நாட்டிலிருந்து மில்லியன் கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்வதற்குக் காரணமாக இருந்தது அரச பயங்கரவாதமே. தமிழ் மக்களுக்கு எதிராகப் பாவிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை.
அரசு தனக்குத் தேவையான நேரங்களில் சில தற்காலிக ஏற்பாடுகளினூடாக புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற முயற்சித்து வருகின்றது.
இந்த விடயங்களை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழர்களும் சரியாகப் புரிந்துள்ளனர் என்பதை அரசு நினைவில் கொள்ளவேண்டும்.
மிகநீண்டகாலமாக இருக்கக்கூடிய தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான ஒரு தீர்வை முன்வைப்பதுடன், இந்நாட்டில் சமபங்கைக் கொண்டுள்ள தமிழ் மக்களை சமத்துவமாக நடத்துவதற்கான கொள்கை முடிவுகளை அரசு வெளிப்படுத்த வேண்டும்.
அரசியல் சாசனத்தில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்த மறுப்பதும், கொடுக்கப்பட்ட உரிமைகளையே மீளப் பறித்தெடுப்பதும் என்ற போக்கு தொடர்ச்சியாகவே நிலவி வருகின்றது.
ஆகவே, ஒருகையால் கொடுத்து மறுகையால் பறிக்கின்ற போக்குக்கும் அரசியல் சாசன விடயங்களை மேவிச்சென்று அரசியல் சாசனத்தில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்த மறுக்கின்ற போக்கள் குக்கும் தீர்வு எட்டப்படவேண்டும்.
விடுக்கப்பட்ட கோரிக்கைகள்
பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை இலங்கை அரசு எதிர்பார்க்குமாக இருந்தால், அந்த ஒத்துழைப்பு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஊடாக நடக்க முடியுமே தவிர, கொழும்பை நம்பி அந்த ஒத்துழைப்புகள் வரமாட்டாது என்பதையும் இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தவகையில், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான இதயசுத்தியுடனான காத்திரமான பேச்சுக்களும் அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுக்களும் இடம்பெறவேண்டும்.
அத்துடன் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவை தொடர்பில் நியாயமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய பரிகாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கோருகின்ற அரசு மேற்கண்ட விடயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஆனால், சாண் ஏற முழம் சறுக்குவதைப் போல் வெளி உலகத்துக்கு ஒரு பேச்சும், உள்ளார்ந்த ரீதியாக அதற்கு எதிரான போக்கையும் கடைப்பிடிப்பதையே எம்மால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
சர்வதேச சமூகம் ஆதரவு
அரசின் மீது நம்பகத்தன்மை ஏற்படுவது போன்ற எத்தகைய செயற்பாடுகளையும் காணமுடியவில்லை. தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு இந்நாட்டின் சமபங்காளிகளான தமிழ்த் தேசிய இனத்தையும் இணைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழர்கள் இந்நாட்டில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என்ற போக்கிலேயே செயற்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசின் இந்தப் போக்கை மாற்றுவதற்கு சர்வதேச சமூகம் தன்னாலான அனைத்தையும் செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
YOU MAY LIKE THIS

