இடைநடுவில் திரும்பிச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக தமது பயணத்தை இடைநடுவில் நிறுத்தி விட்டு நாடுகளுக்கு திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ளதாக சுற்றுலா வழிக்காட்டிகள் மற்றும் சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்படும் போது மின்சாரத்தை உற்பத்தி செய்ய டீசலில் இயங்கும் மின் பிறப்பாக்கி இயந்திரங்களே ஹொட்டல்களில் இருக்கின்றன.
அவற்றுக்கான டீசல் இல்லை என்பதால், சுற்றுலாப் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி, குற்றம் சுமத்துகின்றனர் என விடுதி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
யால உட்பட வனவிலங்கு பூங்காக்களுக்கு செல்வதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை அந்த இடங்களுக்கு ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சிரமமாக இருப்பதால் பயணங்கள் மந்தகதியில் இடம்பெறுகின்றன.
இதனை தவிர உணவகங்களில் உணவை சமைப்பதற்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகள் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்து இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இது சுற்றுலா தொழிற்துறைக்கு மிகப் பெரிய பாதிப்பு எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
