தனது பெயரை பயன்படுத்தி மோசடி: முன்னாள் எம்.பி திலீபன் பகிரங்கம்
தனது பெயரை பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்தவர் செய்த மோசடிக்காக தான் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்பட்டதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன்(Kulasingam Thileepan) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (20.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் பணமோசடி செய்ததாகவும், கைது செய்யப்பட்டதாகவும் பல சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பண மோசடி
நான் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த போது எனது அலுவலகத்திற்கு பலர் பல தேவைகள் கருதி வருவது வழமை.
இதன்போது சில அரசாங்க அதிகாரிகளுக்கு அதனை சிபார்சு செய்து அனுப்புவது வழமை.
ஆனால் முகவர்களாக சிலர் செயற்பட்டு எனது பெயரைப் பயன்படுத்தி பணம் பெற்றுள்ளனர். அவ்வாறானதொரு சம்பவமே நடந்தது. இந்த சம்பவம் எனது அலுவலகத்தில் இடம்பெற்றதால் நான் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியிருந்தது. இதனால் நீதிமன்றம் சென்று எனது தரப்பு நியாயங்களை நான் முன்வைத்துள்ளேன்.
அந்தப பணம் எனது வங்கி இலக்கத்திற்கு வரவுமில்லை. நானும் கை நீட்டி வாங்கவும் இல்லை. அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் இதனை வைத்து பல கட்டுக் கதைகளை கட்டுகிறார்கள்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நான் காணி மாபியா வேலை செய்யவில்லை. மாறாக அரச காணிகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன்.
அதுவும் அடிமட்ட மக்களுக்கே அதனை வழங்கியுள்ளேன். காணி மாபியாக்களுக்கு எதிராக நானும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்.
எனக்கு எதிராக சதி
அரச காணிகளை பிடித்து கள்ளமாக உறுதிகளை எழுதி வைத்துள்ளார்கள். அதனை மீட்டு நான் மக்களுக்கு வழங்கினேன்.அப்படியான பலர் குழுவாக எனக்கு எதிராக சதி செய்து வருகிறார்கள். நான் சொத்து சேர்ந்துள்ளதாகவும் பல கதைகளை சொல்கிறார்கள். அவை அனைத்தும் பொய்.
முகநூலில் வீரம் பேசுபர்களுக்கு எதிராகவும் நிகழ்நிலை சட்டத்தை மையமாக கொண்டு வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்.
இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், மக்கள் என இணைந்து நாம் வன்னியில் புதிய சக்தியாக எழுச்சி பெறவுள்ள நிலையில், அதனை முடக்குவதற்காக இந்த வேலைகள் இடம்பெறுகிறது.
எனது அலுவலகத்தில் இருந்த ஒருவர் செய்த மோசடிக்காக, அந்த அலுவலகத்திற்கு பொறுப்பானவர் நான் என்ற அடிப்படையில் தான் நீதிமன்றம் போக வேணடடியுள்ளது.
நான் அவ்வாறு செய்திருந்தால் அல்லது சொத்து குவித்திருந்தால் நிரூபிக்க வேண்டும்.அவ்வாறு நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்.
எனக்கு விழுந்தது 3000 வாக்கு. ஆனால் எனது பெயரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்துள்ளனர்.
தற்போது ஒரு வழக்கு வந்துள்ளது. இனி எத்தனை வருகிறதோ தெரியாது. அதனை நீதிமன்றம் ஊடாக அணுக தயாராகவே உள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |