11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் - முன்னாள் கடற்படை தளபதிக்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு
கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் 6ஆம் திகதி 3 நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்குமாறு சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜொஹான் அபேவிக்ரம மேன்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அனுமதியளித்துள்ளது.
நீதியரசர்களான சம்பா ஜானகி ராஜரத்ன (தலைவர்) அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் 14 கடற்படையினர் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை நியமித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிலந்த சம்பத் முனசிங்க, சுமித் ரணசிங்க, சஞ்சித் நிலங்க சேனாரத்ன, நளின் பிரசன்ன விக்ரமசூரிய, அன்டன் பெர்னாண்டோ, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டி. கே. பி. தசநாயக்க, ராஜபக்ஷ பத்திரோஹன்லாகே கித்சிறி, அருண துஷார மெண்டிஸ், கே. காமினி, சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, உபுல் சமிந்த, நந்தபிரிய ஹெட்டி, சம்பத் ஜனக குமார மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட.
இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தவிர்ந்த ஏனைய 14 குற்றவாளிகளும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கின் 14வது குற்றவாளியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜொஹான் அபேவிக்ரம தெரிவித்தார்.
மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடையும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறு சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜொஹான் அபேவிக்ரம நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்த நீதிமன்றம், புகார்தாரரின் கோரிக்கையை ஏற்று செப்ரெம்பர் 06 ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்க உத்தரவிட்டது.
