தடுப்பூசி போட்ட நான்கு மாத சிசு உயிரிழப்பு
குளியாபிட்டிய பிரதேசத்தில் நான்கு மாத வயதில் சுகாதார திணைக்களம் பரிந்துரைத்த தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சிசுவொன்று ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளது.
சுகாதாரத் திணைக்களத்திற்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், தடுப்பூசியில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த சம்பவம் நடக்க முடியாது என்று அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்ட தடுப்பூசி
சுகாதார திணைக்களத்தினால் 4 மாதங்களில் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி கடந்த சனிக்கிழமை ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் குளியாபிட்டிய கொமுகொமுவவில் வசிக்கும் 4 மாத குழந்தைக்கு வழங்கப்பட்டது.
அதனையடுத்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட குழந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
டபிள்யூ.ஏ. எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை
சிசுவின் பிரேதப் பரிசோதனை இன்று (17) இடம்பெற்றதுடன், சட்ட வைத்திய அதிகாரி இது தொடர்பில் திறந்த தீர்ப்பை வழங்கியதுடன், மேலதிக பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிசுவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் மேல் கொமுகொமுவ பொது மயானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.