மைத்திரி தலைமையில் உதயமானது புதிய கூட்டணி
சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து சுதந்திர மக்கள் கூட்டணி எனும் புதிய கூட்டணியினை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளனர்.
புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மாலை கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
சுதந்திர மக்கள் கூட்டணி
இலங்கையில் கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரின் தீவிர விசுவாசிகளாக இருந்த உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, ஜி. எல். பீரிஸ் உள்ளிட்ட கடும்போக்குவாத கொள்கைகளை கொண்டவர்களுடன் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியில் இணைந்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு உலங்குவானூர்தி சின்னத்தில் சுதந்திர மக்கள் கூட்டணி எனும் புதிய கூட்டணி போட்டியிடவுள்ளது.
ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இல்லாமல் அனைத்து அரசியல் தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கூட்டணியை உருவாக்கி அதன் ஊடாக தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் கூட்டமைப்பு, உத்தர லங்கா சபை, மற்றும் நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக இயங்கும் உறுப்பினர்களுடன் இணைந்து இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி - பொதுஜன பெரமுன
மைத்திரிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ், சுதர்ஷினி பெர்ணாண்டோ புள்ளே, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அத்துடன், இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணிகள் அமைக்கப்படவுள்ளதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்த பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் பொதுச் சின்னத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட நேற்றைய தினம் ஏகமனதாக தீர்மானித்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
