இன்று முதல் நடைமுறைக்கு வரும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகிய அறிவித்தல்
தேசிய எரிபொருள் அட்டை முறைமை நடைமுறைக்கு வரும் வரை, இன்று முதல் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் உந்துருளிக்கு 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2,000 ரூபாவுக்கும், ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட உள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள்
வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், எரிபொருள் விநியோகிக்கும் திட்டத்தை வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திருத்தம் செய்துள்ளது.
இறுதி இலக்கத்துக்கு எரிபொருள் வழங்கும் நாட்கள் இறுதி இலக்கமாக 0, 1, 2 முதலான இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும்,
3, 4, 5 முதலான இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும்,
6, 7, 8, 9 முதலான இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
இந்த நடைமுறையானது, இன்று முதல் நடைமுறைக்கு வரும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
QR குறியீட்டு முறை
அதேநேரம், QR குறியீட்டு முறைமையானது, இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை கொழும்பின் சில பாகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
QR குறியீட்டு முறைமைக்காக இதுவரையில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ளதுடன், மேலும் பதிவுகள் தொடர்கின்றன.
இந்த QR குறியீட்டு முறைமையானது, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.