எரிபொருள் விநியோகத்திற்கு வருகிறது புதிய நடைமுறைகள்!! அரசாங்கம் அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறைகள் குறித்து ஓரிரு தினங்களில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
முன்னுரிமை அடிப்படையில் விநியோகம்
"எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் விநியோகிப்பது தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிக அவதானம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள், தனியார் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், அம்புலன்ஸ் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வேன்கள் உள்ளிட்டவற்றுக்காக டீசல் வழங்கும் செயற்பாடுகள் இலங்கை போக்குவரத்துசபை டிப்போக்களில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வாகனங்களின் இலக்க தகடுகளிலுள்ள இலக்கங்களின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பது தொடர்பிலும் அமைச்சர் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
அத்தோடு வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய அரச சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்கும் நடைமுறை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த இறுதி தீர்மானம் ஓரிரு தினங்களில் வலு சக்தி அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்" என்றார்.

