ஏப்ரல்16 வரை சர்வதேச விமான சேவைகளை முன்னெடுக்க முடியும் : வெளியான அறிவிப்பு
இலங்கையில் சர்வதேச விமான சேவைகளை முன்னெடுப்பதற்கான எரிபொருள் கையிருப்பு குறித்த தகவலை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (CAA) வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி வரை சர்வதேச விமான சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.
இது குறித்து சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் தம்மிக ரம்புக்வெல்ல கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச விமானங்களுக்கான Jet A-1 ரக எரிபொருள் எதிர்வரும் ஏப்ரல் 16 வரை போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.
விமான எரிபொருள் கையிருப்பு
உள்நாட்டு விமான போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானங்களுக்குத் தேவையான Avgas ரக எரிபொருள், அடுத்த மூன்று மாதங்களுக்குப் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, மேலதிக Jet A-1 மற்றும் Avgas எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய கொள்வனவு கட்டளைகள் (Orders) ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் விமான சேவைகளில் எவ்விதத் தடங்கல்களும் ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விமான எரிபொருள் கையிருப்பு மற்றும் தரவுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக "தேசிய விமான எரிபொருள் ஒருங்கிணைப்புப் பிரிவு" (National Aviation Fuel Coordination Unit) எனும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை பிரதிநிதிகள், இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனப் பிரதிநிதிகள், இலங்கையில் சேவையில் ஈடுபடும் அனைத்து விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகிய தரப்பினர் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |