யாழில் மாணவர்களிடம் வட்ஸ்அப் மூலம் நிதி சேகரிப்பு :அதிபரும் உடந்தை
யாழ்ப்பாணம் வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை
அபிவிருத்திக்கு என வட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக நிதி
சேகரிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பாடசாலையின் அதிபரின் தூண்டுதலின் பேரில் ஒவ்வொரு வகுப்பாக வட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு திட்டங்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களிடம் பணம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
குறித்த வட்ஸ்அப் குழுவில் பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர் பிரதான நிர்வாகிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட்ஸ்அப் குழு
இவ்வாறான செயற்பாட்டுக்கு பல பெற்றோர் விருப்பம் இல்லாத நிலையிலும் மாணவர்கள் பழி வாங்கப்படுவார்கள் என்ற காரணத்தினால் குறித்த வட்ஸ்அப் குழுவில் தாமும் பணத்தை பதிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வட்ஸ்அப் குழுவில் குடும்ப நிலைமை காரணமாக பணம் செலுத்த பின்நிற்கும் மாணவர்களை பெயர் குறிப்பிட்டு விரைவாக பணத்தை பதிவு செய்யுங்கள் என குழுவில் எழுதுவது தமக்கு உளரீதியான தாக்கத்தை ஏற்படுவதாக பெற்றோர் தரப்பால் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
தமக்கு குறித்த குழுவில் பண விபரத்தை பதிவிட விருப்பம் இல்லாத நிலையிலும் அவர்கள் கேட்கும்போது தம்மால் பிள்ளையின் நலன் கருதி பணம் வழங்க முடியாது எனப் பதிலளிக்க சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதாக சில பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.
நாட்டில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களிடம் பாடசாலை அபிவிருத்திக்கு என நிதி கேட்பது முறையற்ற செயற்பாடாக காணப்படுகின்ற நிலையில் உரிய தரப்பினர் நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |