மூத்த ஊடகர் விமல் சொக்கநாதனின் உடலுக்கு லண்டனில் இறுதிவிடை
ஈழத்தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிகப் பிரபலமான ஒலிபரப்பாளரும் ஐ.பி.சி வானொலி மற்றும் ஐ.பி.சி தமிழ்தொலைக்காட்சியில் பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதனின் இறுதி நிகழ்வும் பூதவுடன் தகன நிகழ்வும் இன்று லண்டன் குறைடன் பகுதியில் இடம்பெற்றது.
இன்றைய நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இறுதி நிகழ்வுகள்
லண்டன் குறைடன் பகுதியில் கடந்த முதலாம் திகதி மாலை தொடருந்து ஒன்றினால் மோதப்பட்டு மரணமடைந்த ஊடகரும் சட்டவாளருமான விமல் சொக்கநாதனின் இறுதி நிகழ்வுகள் இன்று குறைடன் பகுதியில் காலை 9 மணிமுதல் மதியம் வரை இடம்பெற்றிருந்தன.
இலங்கை வானொலியில் தனது ஊடகப்பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து லண்டனுக்கு வந்த பின்னர், ஒரு சட்டவாளராகவும் ஊடகராகவும் சேவையாற்றியிருந்தார்.
லண்டன் பிபிசி தமிழோசையில் பணிபுரிந்த அவர், ஐபிசி தமிழ் வானொலி, ரி.ரி.என் தொலைக்காட்சி, ஜி.ரிவி தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தமிழ் தொலைக்காட்சி ஆகிய புலம்பெயர் ஊடகங்களில் செய்தி மற்றும் நடப்பு விவகார தளத்தில் தனித்துவமான சேவையை வழங்கியிருந்தார்.
லண்டனில் இருந்து வெளிவரும் புதினம் பத்திரிகை ஊடாக அவர் ஒரு பத்தி எழுத்தாளராகவும் அறியப்பட்டவர்.
ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஒலிபரப்பாளர் விபத்தில் உயிரிழப்பு |
உடலுக்கு இறுதிவிடை
இன்று காலை இடம்பெற்ற அவரது இறுதி நிகழ்வில் உரையாற்றியவர்கள் அவரது ஊடகத் துறை சேவையை மையப்படுத்திய மாண்பேற்றங்களையும் புகழாரங்களையும் வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வுகளின் பின்னர் குறைடன் மின்மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிவிடை வழங்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
விமல் சொக்கநாதனின் மரணம் புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அவரது மறைவை முன்னிறுத்திய இரங்கல் செய்திகள் இன்றைய இறுதிநாளை முன்னிட்டு சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 10 மணி நேரம் முன்
