கஜேந்திரகுமாரின் கைது - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம்
"அரசியல் தீர்வையும், பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் ஒடுக்கும் வகையில் இலங்கை அரசின் செயற்பாடுகள் உள்ளது.
இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது தெளிவாகக் காட்டுகிறது."
இவ்வாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கண்டனங்கள்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த புதன்கிழமை சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது கண்டனத்தையும், விசனத்தையும் அவர்களது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
டெபோரா ரோஸ்
இது தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா ரோஸ், அமைதியான முறையில் போராட்டமொன்றில் ஈடுபட்டமைக்காக தமிழ் அரசியல் தலைவரும் சிவில் உரிமைகள் செயற்பாட்டாளருமான கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை முறையற்ற செயல் என தெரிவித்துள்ளார்.
அவர் விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளித்தாலும், அவரது கைது மோசமான விடயமாகவே காணப்படுவதாக டெபோரா ரோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலி நிக்கல்
அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக தமிழ் அரசியல் தலைவரும் சிவில் உரிமைகள் செயற்பாட்டாளருமான கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டமை தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.
இது குறித்து நான் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்பேன்’ என்று காங்கிரஸ் உறுப்பினர் விலி நிக்கல் குறிப்பிட்டுள்ளார்.
சம்மர் லீ
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுவிக்கப்பட்டமையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ, கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை மிகுந்த விசனத்தைத் தோற்றுவித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
