“கோட்டா கோ ஹோம்” பின்னணியில் நடந்தது என்ன - கோட்டாபயவின் நெருங்கிய சகா பகிரங்கப்படுத்திய தகவல்கள்!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்ற ராஜபக்ச குடும்பத்துக்குள் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தனியார் ஊடக வலையமைப்பின் தலைவரொருவர் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தளம் ஒன்றின் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கத்திற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பயன்படுத்திய ‘கோட்டா கோ ஹோம்’ என்ற கோசத்தை முதலில் சமூகமயமாக்கியவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர்.
சமூகவலைத்தளத்தில் பரப்பிய யோசித
மகிந்தவின் மகன் யோசித ராஜபக்சவே சமூகவலைத்தளமொன்றில் முதலில் பகிர்ந்தார். ஆனால் அதனை அவர் உருவாக்கினாரா என்பதை உறுதியாகக் கூற முடியாது.
கோட்டாபய ராஜபக்சவை அதிபராக ஆதரித்ததால் தான் ராஜபக்ச குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டேன். அதாவது எனது நெருங்கிய நண்பரான கோட்டாபய ராஜபக்சவை ராஜபக்ச குடும்பத்திற்குள் இருந்து கோட்டாபயவாக பிரித்து வேறு மார்க்கத்தில் கொண்டு செல்லவுள்ளதாக எண்ணி எனக்கு கடும் எதிர்பினை வெளியிட்டுள்ளனர்.
வேறுபட்ட கோட்டாபயவின் முகம்
இருப்பினும் நாட்டை நிர்வகிக்கும் அதிபர் என்ற வகையில் ராஜபக்ச குடும்பத்தின் முழு எதிர்ப்பினையும் மீறி கோட்டாபய ராஜபக்சவிற்கு உதவியதாகவும், பின்னர் கோட்டாபயவின் முகமும், அதிபர் கோட்டாபயவின் முகமும் வேறுபட்டமையினால் நேரடியாக அவரிடமிருந்து விலகினேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

