மும்முனை தாக்குதலால் நிர்மூலமாகும் காசா : அதிகரிக்கும் மரண ஓலம்
"கடந்த சில மணிநேரங்களில், காசா பகுதி மீது வான், கடல் மற்றும் தரையில் இருந்து தாக்குதல்கள் நடைபெறுவதாக இஸ்ரேலிய படைத்துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பின் உள்கட்டமைப்பைத் தகர்க்க இஸ்ரேலிய தரைப்படைகள் காசாவிற்குள் தங்கள் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
300 ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய படையினர் பலி
கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களில் இருந்து இதுவரை 310 இஸ்ரேலிய வீரர்கள் இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ககாரி கூறினார்
இதேவேளை காசா மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்த நகரத்திற்கான இணைய வழி தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.இதனால் அங்கு என்ன நடைபெறுகிறது என்பது வெளி உலகத்திற்கு தெரிய வாய்ப்பில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம், காசா பகுதியில் உள்ள அதன் நடவடிக்கை குழுவுடனான தொடர்பை முற்றிலும் இழந்துவிட்டதாகக் தெரிவித்துள்ளது.
"எங்கள் குழுக்களின் அவசர மருத்துவ சேவைகளை தொடர்ந்து வழங்குவதில் நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம், குறிப்பாக இந்த இடையூறு மத்திய அவசரகால எண் '101' ஐ பாதிக்கிறது மற்றும் காயமடைந்தவர்களுக்கு அம்புலன்ஸ் வாகனங்கள் வருவதைத் தடுக்கிறது.
காசா பகுதியில் பணிபுரியும் தனது குழுக்களின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்படுவதாகவும், "அப்பாவி பொதுமக்கள், மருத்துவ வசதிகள் மற்றும் எங்கள் குழுக்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்க இஸ்ரேலிய அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்க" உலகிற்கு அழைப்பு விடுப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.