தீவிரமடையும் இஸ்ரேல் - பலஸ்தீன் போர் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, இரண்டு அவசர தொலைப்பேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கிடையிலான போர் தீவிரமடைந்து வரும் பின்னணியிலேயே, அமைச்சு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
தொலைபேசி எண்கள்
இதன்படி, மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்காக 0094 711 757 536 அல்லது 0094 711 466 585 ஆகிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, சிறிலங்கா வௌிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் 0094 112 338 837 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நேரத்தில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள், repatriation.consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் மூலம் தூதரக விவகாரப் பிரிவுக்கு தகவல்களை வழங்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விசா அனுமதி பத்திரம்
இதேவேளை, விசா அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு ஆயிரத்து 680 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
காணொளி ஊடாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சட்டவிரோத விசா அனுமதி பத்திரத்தின் ஊடாக இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணயக் கைதிகள்
அதேநேரம், ஹமாஸ் தரப்பினரால் பணயக் கைதிகளாக அழைத்து செல்லப்பட்டுள்ளவர்களில் இலங்கையர்கள் அடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக நிமல் பண்டார கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.