பலஸ்தீன் விவகாரத்தில் மௌனம் காக்கும் உலக நாடுகள் : குற்றம் சாட்டும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர்
பலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் கேள்வியெழுப்பியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புக்கள் மற்றும் சில சர்வதேச நாடுகள், பலஸ்தீன் எதிர்நோக்கும் நிலை தொடர்பில் கருத்து வெளியிடாது தொடர்ந்தும் மௌனம் காப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கைக்கான பலஸ்தீன தூதரகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் இதனை தெரிவித்துள்ளார்.
போர் பிரகடனம் செய்த இஸ்ரேல்
பலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளமை பாரிய குற்றச்செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல நாட்களாக இரகசியமாக காக்கப்பட்டு வந்த விடயத்தை தற்போது இஸ்ரேல் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அதன் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காசாவை குறிவைக்கும் இஸ்ரேல்
குறிப்பாக காசாவை குறிவைத்து இஸ்ரேல் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதனால், அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், உணவு உள்ளிட்ட அனைத்தையும் குறித்த பகுதியில் உள்ள மக்கள் இழந்துள்ளதாக கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த பகுதியில் வாழும் மக்கள் நீண்ட காலமாக சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காசாவின் நிலை மிகவும் பரிதாபகரமானதாக தற்போது மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மௌனம் காக்கும் சர்வதேசம்
பலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து சில நாடுகள் தொடர்ந்தும் மௌனம் காப்பதாகவும் குறித்த தரப்பினர் குருடர்களை போல் நடந்து கொள்வதாகவும் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், பலஸ்தீனர்கள் மனிதர்கள் இல்லையா எனவும் அவர்களது உயிருக்கு மதிப்பில்லையா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், பலஸ்தீன் ஏற்கனவே சமரசத்துக்கு இணக்கம் தெரிவித்திருந்ததையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன் எந்தவொரு குற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் இதனை உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் நன்கு நினைவில் கொள்ள வேண்டும் எனவும் கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் மேலும் தெரிவித்துள்ளார்.
