உலக அழிவை இனி யாராலும் தடுக்க முடியாது எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினையாக கடல்மட்ட அதிகரிப்பு விளங்குகிறது, இந்த பிரச்சினைக்கு மிக முக்கிய பங்காளியாக மேற்கு அந்தாட்டிக்கா பிரதேசம் விளங்குகின்றது.
மேற்கு அந்தாட்டிக்கா பகுதியிலுள்ள பனிப்பாறைகள் உருகுவதால் கடல்மட்டம் அதிகரித்து வருகிறது, இந்த உருகும் அளவு தற்போது அதிகரித்துள்ளதாகவும் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இதன் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்றும், இதனால் உருவாகப்போகும் அழிவுகளை யாராலும் தடுக்க முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
பச்சை வீட்டு வாயுக்களின் அதிகரிப்பு கடலின் வெப்பமயமாதலை அதிகரித்து துருவப்பிரதேசங்களிலுள்ள பனிப்பாறைகளின் உருகுதலை அதிகரித்து கடல் மட்ட அதிகரிப்பினை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் முன்பே கணித்து எச்சரித்திருந்தனர்.
மூன்று மடங்கு வேகமாக
அதன்படி அந்த கருதுகோள் இன்று நிதர்சனமாகிவருகிறது, ஐக்கிய இராச்சியத்தின் இன் தேசிய சூப்பர் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் நான்கு எதிர்கால கணிப்புகளை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.
உலக வெப்பநிலை உயர்வு தரவுகளின் படி மேற்கு அந்தாட்டிக் பனிக்கட்டியானது 20 ஆம் நூற்றாண்டில் இருந்ததை விட 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் மூன்று மடங்கு வேகமாக உருகும்.
அதன்படி மேற்கு அந்தாட்டிக் பனிக்கட்டியானது அதன் உருகும் கட்டுப்பாட்டை தாண்டி விட்டது என்றும் அதனை அதன் வரலாற்று நிலையில் பாதுகாக்க விரும்பியிருந்தால், பல தசாப்தங்களுக்கு முன்பே காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தற்போது நிலைமை கையை மீறி சென்றுவிட்டதாகவும்" பிரித்தானியாவைச் சேர்ந்த அந்தாட்டிக் ஆய்வாளரான டொக்டர் கெய்ட்லின் நாட்டன் கூறியுள்ளார்.
மேலும், மேற்கு அந்தாட்டிக் பகுதியில் மிதந்த நிலையில் இருக்கும் பனி மலைகள் எதிர்வரும் ஆண்டுகளில் வலுவிழந்து, கடலை நோக்கி அவை பனிப்பாறைகளாக உடைந்து உருகி கடல்மட்டம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
இதில் நேர்மறையான விடயமாக, 21 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பனிப்பாறைகள் உருகுவது மெதுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது எதிர்காலத்தில் அதிகரித்த கதியில் பனிப்பாறைகளை உருக வைத்து பாரிய அழிவுக்கு வழிவகுக்கும்.
இதனை குறைக்க வேண்டுமாக இருந்தால் பெற்றோலிய எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும், இயற்கைக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளை குறைத்து நீரால் உலகு மூழ்குவதை தாமதப்படுத்துவோம் என்று நோட்டன் கூறியுள்ளார்.
இன்று நாம் செய்யும் கருமங்கள் நீண்ட காலத்திற்கான கடல் மட்ட உயர்வு விகிதத்தை குறைத்து உலகின் நிலைத்திருப்பிற்கு வழிவகுக்கும்.