சிறையிலுள்ள பிக்குகளின் ஆடை விதிமுறைகள் : வெளியான அதிவிசேட வர்த்தமானி
பௌத்த பிக்கு ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர்களின் துறவற ஆடையை (காவி உடை) நீக்குவது தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை உள்ளடக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நீதி அமைச்சரின் அனுமதியுடன், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமாரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகப் பௌத்த பிக்கு ஒருவர் சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது, பின்பற்றப்பட வேண்டிய உத்தியோகபூர்வ நடைமுறைகள் மற்றும் சட்டப் பூர்வமான வழிமுறைகள் குறித்து இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பௌத்த விவகாரங்கள் திணைக்களம்
அதன்படி, பௌத்த பிக்கு ஒருவர் சிறையில் அடைக்கப்படும்போது, அவர் அதுவரை அணிந்திருந்த துறவற உடைகளை அகற்றுவது குறித்து, பௌத்த விவகாரங்கள் திணைக்களம் சம்பந்தப்பட்ட பௌத்த நிக்காயா அல்லது பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.
“356A - பௌத்த பிக்கு ஒருவர் சிறைத்தண்டனை பெறும் பட்சத்தில், அவர் சிறையில் அடைக்கப்படும் தருணத்தில் அணிந்திருந்த உடைகளை அகற்றுவது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர், பௌத்த விவகாரங்கள் திணைக்களத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும். பௌத்த விவகாரங்கள் திணைக்களம் இது குறித்து சம்பந்தப்பட்ட நிக்காயா அல்லது பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.
மேலும், அந்த உடைகளை அகற்றுவது தொடர்பாக குறித்த நிக்காயா அல்லது பிரிவு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து, பத்து நாட்களுக்குள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.
குறித்த காலத்திற்குள் எந்தப் பதிலும் கிடைக்கப்பெறாத பட்சத்தில், சிறைச்சாலைகள் ஆணையாளர் உரிய விதிகளுக்கு அமைவாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
சிறைச்சாலைகள் ஆணையாளர்
சிறைத்தண்டனை பெற்ற பிக்கு ஒருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படும்போது, அவர் சிறையில் அடைக்கப்பட்ட தருணத்தில் அணிந்திருந்த அதே உடைகளை மீண்டும் அணிவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட நிக்காயா அல்லது பிரிவு, அவர் மீண்டும் அந்த உடைகளை அணிவதற்கு அனுமதி வழங்கவில்லை என்றால், சிறைச்சாலைகள் ஆணையாளர் உரிய வழிகாட்டல்களுக்கு அமைவாகச் செயற்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிக்காயா அல்லது பிரிவிடமிருந்து தேவையான அனுமதியைப் பெறுவதற்காக, சிறைச்சாலைகள் ஆணையாளர், குறித்த பிக்கு சிறையில் அடைக்கப்பட்ட திகதியிலிருந்து ஏழு (07) வேலை நாட்களுக்குள் பௌத்த விவகாரங்கள் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும்.
மற்றொரு மதத்தைச் சேர்ந்த மதகுரு ஒருவர் சிறையில் அனுமதிக்கப்படும்போதோ அல்லது அங்கிருந்து விடுவிக்கப்படும்போதோ, இந்த உத்தரவுகள் தகுந்த மாற்றங்களுடன் அவருக்கும் பொருந்தும்“ என்று அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |