கடவுள் நமக்கு “கஞ்சா” கொடுத்துள்ளார், அதை வணிகப் பயிராக்குவோம்! பெண் எம்.பி கோரிக்கை (காணொளி)
தேயிலை, ரப்பர், தென்னை போன்ற வணிகப் பயிர்களால் தற்போது நாட்டுக்கு சரியான வருமானத்தை ஈட்ட முடியாததால், கஞ்சாவை வணிகப் பயிராக அனுசரணை செய்து அதை பயிரிடுவது பொருத்தமானதாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே (Diana Gamage) நிதி அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
போதைப்பொருளாக கஞ்சாவை பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கஞ்சாவை ஒரு மருந்துப்பொருளாக ஏற்றுமதி செய்தால் வருவாயைப் பெற முடியும் என்றும் நேற்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது கூறினார்.
பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும், அழகுசாதன பொருட்களிலும் இதை பயன்படுத்தி பொருட்களை தயாரித்து, ஏராளமான தொழில்முனைவோரை உருவாக்க முடியும் எனவும் சுட்டிக் காட்டினார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
“நிதி அமைச்சரிடம் ஒரு பிரேரணையைக் கொண்டு வர விரும்புகிறேன், இன்று நம் நாட்டில் வணிகப் பயிர் இல்லை.
நாங்கள் நீண்ட காலமாக தேயிலை, ரப்பர் மற்றும் தேங்காயை சாப்பிட்டோம், ஏற்றுமதியும் செய்தோம். ஆனால் இன்று தேங்காய் இறக்குமதி செய்கிறோம். காரணம் தென்னை நிலங்கள் விற்கப்படுகின்றதன.
மிக உயர்ந்த தரத்தில் சிலோன் தேயிலையை ஏற்றுமதி செய்தோம். இன்று சீனாவும் கென்யாவும் அதிலிருந்து அந்நியச் செலாவணியைப் பெறுகின்றன.
இன்று நமக்கு வணிகப் பயிர் மிச்சமில்லை. ஆனால் கடவுள் நமக்கு பயிர் கொடுத்திருக்கிறார். அதுதான் கஞ்சா.
அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டில் கஞ்சா பயிரிடப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
இலங்கை ஒரு வெப்பமண்டல நாடாக இருப்பதால் இதை பயிரிட்டு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்ட முடியும்.
1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தின் 8 ஆம் பிரிவின் படி, ஆயுர்வேத ஆணையாளருக்கு மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே கஞ்சாவை பயிரிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.