கோட்டாபயவின் முறையற்ற ஆட்சி : அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட நிலை
2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ச(gotabaya rajapaksa) முறையற்ற வகையில் செயற்பட்டதன் விளைவையே இன்று சிரேஷ்ட அரசியல்வாதிகள் எதிர்கொள்கின்றனர் என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க(s b dissanayake) தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது ஏன்..!
அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அநுர குமார தலைமையிலான அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கின்றனர். எனவே நாட்டு மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி அநுர குமார(anura kumara dissanayake) மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. உறுதியான அரசாங்கம் தற்போது இல்லை என்பதை குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் மறந்து விட்டனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய வாக்குறுதிகளை ஒரு மாத காலத்துக்குள் நிறைவேற்ற முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது . தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் தோற்றுவிக்க வேண்டும் என்பதை நாட்டு மக்களிடம் வலியுறுத்துகிறேன்.
நெருக்கடி நிலைமைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காண முடியாது
ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்த அவருடன் இணக்கமாக செயற்பட கூடிய தரப்பினரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். மாற்றுக் கொள்கைகளையுடைய தரப்பினரை தெரிவு செய்தால் நல்லாட்சி அரசாங்கத்தை போன்று முரண்பாடான நிர்வாக கட்டமைப்பே தோற்றம் பெறும் என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சிறந்த அரசியல் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்பை உருவாக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பின் நெருக்கடி நிலைமைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காண முடியாது. ஜனாதிபதிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        