தீர்மானமிக்க தருணத்தில் கோட்டாபய உருக்கம்
இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறென உணருகிறேன் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) கூறியுள்ளார்.
நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதனைக் கூறிய அவர், அவற்றை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“ நாட்டின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பல சிக்கல்களால் இன்று மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரிசையில் நின்று நேரத்தைச் செலவழிப்பதால் ஏற்படும் வேதனையும், அசௌகரியமும், கோபமும் மிகவும் நியாயமானது.
கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச தலைவரான எனது பொறுப்பாகும்.
எந்தச் சிரமத்திற்கும் சவாலுக்கும் மத்தியிலும் அந்தப் பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று என்னை நியமித்த மக்களிடம் உறுதியளிக்கிறேன்.
தற்போது சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நாம் முன்னுரிமை வழங்க வேண்டியது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே ஆகும். அதைத் தீர்க்காமல் வேறு எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது” என்றார்.
