அரச ஊழியர்களுக்கு மீண்டும் பணியமர்வு - இன்று முதல் நடைமுறை
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களை மீண்டும் பணியில் இணைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த அரச பணியாளர்கள் தாங்கள் வேட்பாளராக போட்டியிடும் தொகுதியில் பணிபுரிந்தால், அதற்கு வெளியே உள்ள அரச அல்லது அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்று பணியில் இணைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறை
அதன்படி, குறித்த அரச பணியாளர்கள் இன்று (9) முதல் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களால் நியமிக்கப்பட்ட பணியிடங்களில் பணிக்கு சமுகமளிக்க முடியுமென அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு சமூகமளிக்க அனுமதிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
